செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது

5,165 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது

சென்னை, அக்.13-–

தமிழகம் முழுவதும் நேற்று 4 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 877 ஆண்கள், 2 ஆயிரத்து 1 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 4,879 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,212 பேரும், கோவையில் 393 பேரும், சேலத்தில் 304 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 264 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தபட்டியலில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 382 ஆண்களும், 2 லட்சத்து 61 ஆயிரத்து 850 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 32 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 900 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 84 ஆயிரத்து 777 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 165 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,219 பேரும், கோவையில் 466 பேரும், சேலத்தில் 332 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 43 ஆயிரத்து 747 பேர் உள்ளனர்.

62 பேர் பலி

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 33 பேரும், தனியார் மருத்துவமனையில் 29 பேரும் என 62 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 314 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 191 தனியார் மற்றும் அரசு ஆய்வு மையங்களில் நேற்று 78 ஆயிரத்து 440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 81 லட்சத்து 63 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *