நாடும் நடப்பும்

கொரோனா தடுப்பூசி: உலக தலைவர்கள் இந்தியாவை பாராட்டுகிறார்கள்

இந்த மாத துவக்கத்தில் இந்திய அரசு கனடா நாட்டிற்கு 50 ஆயிரம் பேருக்கு கோவிட் தடுப்பூசியை அனுப்பி உள்ளது.

கடந்த 2020–ம் ஆண்டில் நாம் கொரோனா பாதிப்பால் செயலிழந்து இருந்தோம், சீனா மீது குற்றம் சுமத்தினோம்! ஆனால் கிருமி ஆய்வகங்கள் உலகெங்கும் இந்த புதிய ரக விஷம கிருமியை எதிர்த்து போரிடுவது எப்படி என்ற ஆய்வில் மும்முரமாக இருந்தனர். அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருந்தது.

நாம் புதிய ரக தடுப்பூசியை உருவாக்க தயாரான போது உடன் அவற்றை தயாரிக்கவும் பிரமாண்ட ஏற்பாடுகளையும் செய்து விட்டோம்! அதன் பயனாக இன்று உலக கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் கிட்டத்தட்ட 60 சதவிகித தயாரிப்பு திறன் நம் நாட்டில் உருவாகிவிட்டது.

‘பிரிக்ஸ்’ அமைப்பு நாடுகளில் இந்தியா, சீனா, ரஷியாவில் இப்படி தடுப்பூசி ஆய்வுகளில் மும்முரமாக இருந்தோம். ரஷ்யா தான் ஒருவழியாக ஓர் தடுப்பு மருந்தை தயாரித்து ஆய்வுகள் நடத்தி வெற்றியும் கண்டது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் ஆய்வு கூடத்தில் உருவான ஆஸ்டிரா ஜெனிகா (Astrazeneca) தடுப்பூசியை சோதித்து வெற்றிகளை கண்டாலும் உலக தேவைக்கு வேண்டிய தயாரிப்பு திறன் இல்லாததால் செய்வதறியாது தவித்தது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி அழைப்பின் பேரில் பூனாவில் உள்ள சீரம் நிறுவனம் இந்திய தேவைகளுக்கு தங்களது தயாரிப்பு திறனை தர முன்வந்தது.

இங்கிலாந்து ஆய்வாளர்களின் கண்காணிப்பில் தரமான தடுப்பூசியை பிப்ரவரி மூன்றாவது வாரத்திலேயே தயாரித்து உபயோகத்திற்கு அனுப்ப துவங்கியும் விட்டனர்.

இந்நிலையில் கனடா உட்பட உலகம் முழுவதும் 47 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை வாங்கினோம். இப்போது வளர்ந்த நாடுகளுக்கு கூட இந்தியா மருந்துகளை அனுப்பி வருகிறது. இதுதொடர்பான கருத்துகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

கனடாவின் மக்கள் நமது தடுப்பூசியை பெற்றவுடன் சந்தோசத்தில் இந்திய கொடியை ஏந்தி காரில் ஊர்வலம் வந்து நமக்கு நன்றி கூறியும் உள்ள வீடியோ நமக்கெல்லாம் பூரிப்பை தருகிறது.

73 ஆண்டுகளில் நமது வளர்ச்சி அபாரமானது தான்! 1947–ல் சுதந்திரம் பெற்று விட்ட நாட்களில் நமக்கு எதிர்நோக்க வேண்டிய மிகப்பெரிய சவால்களில் ஒன்று மலேரியா நோயாகும்! அப்போது லட்சக்கணக்கானோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது கனடாவைச் சேர்ந்த செஞ்சிலுவை சங்கம் சார்பில் இந்தியாவுக்கு 93 பெட்டிகளில் பென்சிலின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

கனடாவில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்ட பென்சிலின் மருந்துகள் கடந்த 1947–-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி டெல்லி வந்தடைந்தன. அந்த மருந்துகளை அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் பெற்றுக் கொண்டார். இன்றோ கனடாவிற்கு ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசியை தர ஒப்பந்தம் செய்துள்ளோம், அதில் ஐம்பது ஆயிரம் குப்பிகளை அனுப்பியும் விட்டோம்!

உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அவையாவும் ஆக்கபூர்வமான உலக அமைதிக்கும் மக்களின் நலன் காக்கவும் இருப்பதால் இந்தியாவின் மீது உலக தலைவர்களுக்கு புது அபிமானம் பிறந்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய நல்லம்சமாகும்.

21–ம் நூற்றாண்டில் நாம் பொருளாதார வல்லரசாக உயர்ந்து வருவதுடன் உலக நன்மைக்கும் ஆதாரமாக இருப்பது நம் கலாச்சார மகிமை அதை பெருமையுடன் தொடர்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *