செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, பிப்.16-

‘முன்கள பணியாளர்களை போல தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்’, என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 2-வது முறையாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் 2வது முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் உடனிருந்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 372 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 430 பேர் சுகாதார பணியாளர்கள் ஆவார்கள். 22 ஆயிரத்து 756 கொரோனா முன்கள பணியாளர்கள் ஆவார்கள். 14 ஆயிரத்து 186 பேர் போலீசார் ஆவார்கள். இதில் திங்களன்று (நேற்று) மட்டும் 3 ஆயிரத்து 126 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதில் 1,154 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி தவிர்க்கும் போக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று 20 ஆயிரம் பேருக்கும் அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த பணி இன்னும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு குறையும்போது தடுப்பூசி எதற்கு? என்ற எண்ணம் இருக்கிறது. அது தவறு. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களையும், கொரோனா தடுப்பூசிக்கான முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணி இந்த வாரமே தொடங்கி, அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

முதியோர், பல்வேறு நோய் உள்ளவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருகின்றனர். இந்த கருத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.

2ம் தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தவறினால், நோய் எதிர்ப்பு சக்தி உருவாக தாமதம் ஆகும். எனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் கட்டாயம் 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *