செய்திகள்

மார்ச் 1ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

புதுடெல்லி, பிப்.25–

நாடு முழுவதும் வரும் மார்ச் 1ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு அவசர கால பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஜனவரி 16-ந் தேதி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக, உள்நாட்டில் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அடுத்த கட்டமாக வரும் மார்ச் 1–ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் அறிவித்தார்.

இதையொட்டி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தின் 2வது கட்டம் வரும் மார்ச் 1ந் தேதி தொடங்கும். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 10 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகள் மூலமும், 20 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் மூலமும் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 கோடி பேருக்கு குறைவில்லாமல் இருப்பார்கள்.

இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படும். அதற்கான கட்டணத்தை மத்திய அரசு செலுத்தி விடும். இதற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும்.

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு என்ன கட்டணம் வசூலிப்பது என்பது குறித்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும், மருத்துவமனைகளுடனும் விவாதிக்கப்பட்டு வருகிறது. என்ன தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்யும்.

இந்தியாவில் இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 14 லட்சம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி திட்டம், எந்தவித தவறோ, புகார்களோ இன்றி வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *