செய்திகள்

தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது

60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் ஆர்வமுடன் போட்டுக்கொண்டனர்

சென்னை, மார்ச்.1-

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3-ந் தேதி முதல் முன்களப் பணியாளர்களும், பிப்ரவரி 8-ந் தேதி முதல் போலீசாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள், அடுத்த 28வது நாளில் 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 2.77 லட்சம் கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 23.77 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இதில் 26–ந்தேதி வரை முதல் டோஸ் மற்றும் 2வது டோஸ் என மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 951 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பயனாளர்கள் ‘கோ–வின்’ இணையதளம் மற்றும் கோவின் செயலி வழியாக பதிவு செய்துதான் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த இணையதளத்தின் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த இணையதளம் ‘கோ–வின் 1.0’-ல் இருந்து ‘கோ–வின் 2.0’ ஆக மேம்படுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி

இந்த நிலையில் 2வது கட்டமாக இன்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதற்காக மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு வழங்கியது. இந்த தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக்கொள்ளவும் அனுமதி அளித்தது.

இதையடுத்து தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. ஏற்கனவே வழங்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போட விரும்புவோர் முன்கூட்டியே தங்களின் பெயர்களை மருத்துவமனைகள், பொது சேவை மையங்கள், கோ–வின் இணையதளத்தில் போன்றவற்றில் பெயர், முகவரியுடன், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, ‘பான் கார்டு’ பயன்படுத்தி பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான மருத்துவ சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தடுப்பூசி போட விரும்பியோர் முன் பதிவு செய்து கொண்டனர்.

கோ–வின் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்

கொரோனா தடுப்பூசி போட விரும்புவோர், கோ–வின் இணையதளம் (http://cowin.gov.in) மூலமாக பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும், கோ-வின் செயலியில் பயனர்கள் பதிவு செய்ய முடியாது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிளே ஸ்டோரில் உள்ள கோ–வின் செயலியை இப்போது நிர்வாகிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கூறி உள்ளது.

கோவின் செயலியை பொதுமக்கள் டவுன்லோடு செய்து அதன்மூலம் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அதற்கு ஓடிபி வரவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்தையடுத்து, இந்த விளக்கத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *