செய்திகள் வர்த்தகம்

வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் துவக்கினார்

சென்னை, ஜன.20-

கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில், முதல் கட்டமாக ‘கோவேக்சின்’, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையில் அங்கு பணியாற்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் 1,500 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் திட்டத்தை, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது எஸ்.ஆர்.எம். மருத்துவமனை குழுமங்களின் தலைவர் ரவி பச்சமுத்து, ‘சிம்ஸ்’ மருத்துவமனையின் துணைத்தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி, டாக்டர்கள் பி.குகானந்தம், கே.ஸ்ரீதர், எஸ்.ஜே.அஸ்வின் சாய்ராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுகாதார பணியாளர்கள் தங்களுடைய அரசு அடையாள அட்டையை பயன்படுத்தி, ‘சிம்ஸ்’ மருத்துவமனையில் தடுப்பூசி இலவச மாக போடுவதற்கு பதிவு செய்யலாம்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘நம்பிக்கையை விதைத்து, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போடுவதற்காக மக்களை ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும். தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்கள் சிறப்பான பலனை அடைந்து வருகிறார்கள்’ என்றார்.

எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி குழுமங்களின் தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், ‘இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி முகாமில் ‘சிம்ஸ்’ மருத்துவமனையும் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த 10 மாதத்தில் 3,500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது பெருமையாக இருக்கிறது’ என்றார்.சாமான்ய மக்கள் ஏராளமானவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், தங்களது வாழ்வாதாரப் பணிகளில் துணிச்சலாக ஈடுபடவும் நம்பிக்கையளிக்கும் விதமாக தமிழக மற்றும் மத்திய அரசு எடுத்து வரும் இந்த முக்கியப் பணியில் நாங்களும் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *