வர்த்தகம்

ரேலா மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கினார்

2 மாதங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசியை பரிசோதனை முறையில் போட்டுக்கொண்ட டாக்டர் முகமது ரேலா

சென்னை, ஜன. 22–

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையான ரெலா மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு எதிரான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் முகாமை தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ரேலா மருத்துவமனை தலைவரும் டாக்டருமான பேராசிரியர் ரேலா முன்னிலையில் துவக்கி வைத்தார்.

முகமது ரெலா பேசுகையில், தடுப்பூசி மட்டுமே தொற்று பரவலை முழுமையாக தடுக்க சிறந்த வழியாகும். கடந்த 10 மாதங்களில் கொரோனா பாதித்த 2,500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு நாங்கள் சிறப்பாக சிகிச்சை அளித்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக தற்போது தடுப்பூசி போடும் முகாமை இங்கு துவக்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் பரிசோதனை முறையில் இந்த தடுப்பூசியை நான் போட்டுக் கொண்டேன். தற்போது வரை எனக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பதை நான் தற்போது உங்களிடையே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசி போட்ட பிறகு எனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது நல்ல நிலையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு பொறுப்பான டாக்டர் என்ற அடிப்படையில், தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் மற்றும் தொற்றுநோய்க்கு எதிராக போராட தடுப்பூசியை போட மக்களை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன் என்றார்.

இம்முகாம் குறித்து மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கூறுகையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த 1100 சுகாதார பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும். அதனைத் தொடர்ந்து எங்கள் மருத்துவமனை அருகில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும். பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், அடுத்த 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் எங்களிடம் உள்ளன என்றார்.

மருத்துவ பணியாளர்கள் 100 பேருக்கு தடுப்பூசி

ரேலா மருத்துவமனையில் தடுப்பூசி முகாம் துவங்கிய இன்றைய தினம் 100க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *