செய்திகள்

மும்பையிலிருந்து வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்

சென்னை, பிப்.23-

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 100 பேரில் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மும்பையிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் 8-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் அனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘டயாலிசிஸ்’ யந்திரத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை 8-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த மருத்துவமனையில் இதுவரை 8 இருதய மாற்று அறுவை சிகிச்சை உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்காக பல்வேறு உயர் தர சிகிச்சைகளும் இலவசமாக இந்த மருத்துவமனையில் செய்யப்படுகிறது.

இந்திய அளவில் மராட்டியம், கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 100 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டால் அதில் 0.9 சதவீதம் பேருக்கும் மட்டுமே கொரோனா பாதிப்பு இருக்கும் நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முறையாக பின்பற்றாவிட்டால் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழக எல்லைகள் கண்காணிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பலர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு சென்று வருபவர்களாக உள்ளனர். மும்பையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து வருபவர்களை கண்காணிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் அனைவருக்கும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் பாதிப்பு யாருக்கு வந்தது; எப்படி வந்தது; ஒரே நிகழ்வில் பங்கேற்றவர்களா என கண்டறிந்து, நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்கிறோம். தமிழக எல்லை பகுதிகளில் காய்ச்சல் குறித்த கண்காணிப்பை தீவிர படுத்தி உள்ளோம்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் இதுவரை 36 பயணிகளுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகிறார். தடுப்பூசிகள் பாதுகாப்பானது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 2-ம் முறை தடுப்பூசி உரிய நேரத்துக்குள் போட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

தமிழகத்தில் மதுரை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே காணப்படுகிறது. எனவே டெங்கு காய்ச்சலுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மருத்துவமனைகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருகிறவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *