செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்தபோதும் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்தபோதும் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது

மத்திய சுகாதாரத் துறை தகவல்

புதுடெல்லி, அக்.18–

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்தபோதிலும், குணமடையும் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை எட்டிய நிலையில், அதன்பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கியது.

தற்போது அதிக அளவிலான பரிசோதனைகள் செய்யப்பட்டாலும், பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 9.32 கோடி சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை 8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

இதுதொடர்பான புள்ளிவிவர வரைபடத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது 70 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு 74,94,552 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1033 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,14,031 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,97,210 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 72,614 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 88.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *