செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நேற்று 543 பேருக்கு தொற்று

சென்னை, மார்ச்.6-

தமிழகத்தில் 29 நாட்களுக்கு பின்னர் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 4ந்தேதி கொரோனா பாதிப்பு 500-க்கும் குறைவாக குறைந்தது. இந்த நிலையில் தொடர்ந்து 29 நாட்களாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 450 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 328 ஆண்கள், 215 பெண்கள் என மொத்தம் 543 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 225 பேரும், கோவையில் 51 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 33 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 53 ஆயிரத்து 992 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,513 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 562 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 லட்சத்து 37 ஆயிரத்து 525 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 3 ஆயிரத்து 954 பேர் உள்ளனர்.

சென்னையில் அதிகரிப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 150 என்ற எண்ணிக்கையில் இருந்தது. நேற்றைய பாதிப்பு 225 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 487 பேர் குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்து 161 பேர் உயிரிழந்துள்ளனர். 1,837 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்த வகையில் சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் 226 பேர் சிகிச்சையில் உள்ளனர். அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் மண்டலங்களில் ஒரு நாள் பாதிப்பும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5 நாளில் 1 லட்சம் முதியவர்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 44-வது நாளாக நேற்று 1,199 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 92 ஆயிரத்து 208 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 85 ஆயிரத்து 134 பேர் முதல் முறையாகவும், 7 ஆயிரத்து 74 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்தவகையில் இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 807 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 31 ஆயிரத்து 301 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 10 ஆயிரத்து 971 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 33 ஆயிரத்து 129 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 62 ஆயிரத்து 604 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களைவிட முதியவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 886 முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதேபோல் இணை நோய் பாதிப்புள்ளவர்கள் 61 ஆயிரத்து 228 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *