செய்திகள்

கர்நாடக சட்டசபை கூட்டத்தில் சட்டையை கழற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவாரம் சஸ்பெண்ட்

பெங்களூரு, மார்ச் 5–

கர்நாடக சட்டசபை கூட்டத்தில் சட்டையை கழற்றிய சங்கமேஸ்வர் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அவர் பேச ஆரம்பித்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, “சபையின் எந்த விதியின் கீழ் இந்த விவாதத்தை நீங்கள் நடத்துகிறீர்கள். இத்தகைய விவாதம் நடத்த சபை விதிகளில் அவகாசம் உள்ளதா?. கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது இதுபற்றி நீங்கள் கூறினீர்கள். ஆனால் நாங்கள் எந்த கருத்தையும் கூறவில்லை” என்றார்.

அதற்கு சபாநாயகர் காகேரி, “அரசியல் சாசனம் 363-வது விதியின் கீழ் சபாநாயகருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விவாதத்தை நான் நடத்த அனுமதி வழங்கியுள்ளேன். இதற்கு முன்பு அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போதும் இதே சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தியே விவாதம் நடத்தினேன்” என்றார். அதைத்தொடர்ந்து காகேரி, ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து தனது பேச்சை தொடங்கினார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகருக்கு எதிராகவும், பாரதீய ஜனதாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் கடும் கூச்சல்-குழப்பத்திற்கு மத்தியில் சபாநாயகர் காகேரி தனது அச்சிடப்பட்ட புத்தக உரையை வாசித்து முடித்தார். அதைத்தொடர்ந்து, பேசிய அவர், இந்த விஷயம் குறித்து விவாதிக்க காங்கிரசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசுகையில், “இந்த ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்த விவாதத்தில் பங்கேற்று பேச காங்கிரஸ் தரப்பில் 19 உறுப்பினர்களின் பெயர் பட்டியல் என்னிடம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென இந்த விவாதத்திற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல” என்றார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர்.

அப்போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவரான பத்ராவதியை சேர்ந்த சங்கமேஸ்வர் திடீரென தனது சட்டையை கழற்றி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு சபாநாயகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதலமைச்சர் எடியூரப்பாவும் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சபையை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் காகேரி அறிவித்தார்.

சபை ஒத்திவைப்புக்கு பிறகு மீண்டும் சட்டசபை கூடியபோது, சபாநாயகர் காகேரி, “காங்கிரஸ் உறுப்பினர் சங்கமேஸ்வர் அவையில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டார். இதை சகித்துக்கொள்ள முடியாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்துக்கூற வேண்டும்” என்றார்.

அப்போது பேசிய பசவராஜ் பொம்மை, சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உறுப்பினர் சங்கமேஸ்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து காகேரி பேசுகையில், “உறுப்பினர் சங்கமேஸ்வர் இன்று (நேற்று) முதல் வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்” என்றார். அதன் பிறகு சபைக்கு வந்த சங்கமேஸ்வரை சபைக்குள் அனுமதிக்க அவை காவலர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் சங்கமேஸ்வர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *