செய்திகள்

சசிகலா விலகலால் குழப்பம் தீர்ந்தது: அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு

சென்னை, மார்ச் 4

சசிகலா அரசியலிருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்துள்ளதால், அண்ணா தி.மு.க.வில் நீடித்து வந்த குழப்பம் தீர்ந்துள்ளது. இதனை தொண்டர்கள் அனைவரும் முழுமையாக வரவேற்றுள்ளனர் என்று நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, வைகைச்செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கே.பி.முனுசாமி

இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியதாவது:–

ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். சசிகலாவின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் தினகரன். 10 ஆண்டுகளுக்கு மன்னதாகவே தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே சசிகலாவின் கருத்துகளை தினகரன் கருத்துடன் சேர்க்க வேண்டாம்.

தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே ஜெயலலிதாவின் ஆசை. அதை பிரதிபலிக்கும் வகையில் சசிகலாவின் கருத்து உள்ளது. ஜெயலலிதா மீது தீவிர விசுவாசமாக இருப்பதை வெளிகாட்டிய சசிகலாவை அண்ணா தி.மு.க.வில் சேர்த்து கொள்வது காலம் தான் பதில் சொல்லும் என்று கூறினார்.

வைகைச்செல்வன்

அண்ணா தி.மு.க. செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியதாவது:-

சசிகலா விலகலால் அண்ணா தி.மு.க.வில் நீடித்து வந்த குழப்பம் தீர்ந்துள்ளது. அவரது விலகல் கட்சியினருக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனை தொண்டர்கள் அனைவரும் முழுமையாக வரவேற்றுள்ளனர். ஜெயலலிதாவின் விருப்பப்படி நல்ல முடிவை சசிகலா எடுத்துள்ளார் என்றார்.

மற்றொரு செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:-

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் முழு ஓய்வில் இருப்பார். தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார் என நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அதன்படியே அவர் முடிவு எடுத்துள்ளார்.

இதனை அண்ணா தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழுமையாக வரவேற்றுள்ளனர். இதன் மூலம் அண்ணா தி.மு.க.வில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்துள்ளது. நல்ல முடிவை அவர் எடுத்துள்ளார். கட்சிக்கு புது தெம்பு கிடைத்துள்ளது. தினகரனை நம்பி இனி யாரும் அவர் பின்னால் செல்ல வேண்டாம். அங்கு இருப்பவர்கள் அண்ணா தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *