நாடும் நடப்பும்

விவசாயத்தில் கணினி புரட்சி

கடந்த மாதம் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. கூடவே நாடு தழுவிய விவாதங்களும் காரசாரமாக துவங்கியதையும் கண்டோம். விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக அவசியம் தேவைப்படும். ‘மாற்றம் அவசியம் தேவை’ என்ற இன்றைய காலக்கட்டத்தில் வந்து இருக்கும் இப்புதிய மசோதாக்கள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதில் உள்ள சாதக பாதகங்களை கண்ட பிறகு அவற்றில் உள்ள பாதகமான முயற்சிகளை கைவிட மத்திய அரசு திட்டமிட்டு இருக்கவேண்டும்.

விவசாயிகளின் வாழ்வு பற்றிய செயல் திட்டம் என்பதால் கொரோனா தொற்றுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரச்சாரம் போல் இதற்கும் ஏன் நாடு தழுவிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை? என்ற கேள்வி எழுகிறது.

அந்த மூன்று மசோதாக்கள், வேளாண் விளைபொருட்கள் வர்த்தகத்தில் சீர்திருத்தம், வேளாண் உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவையாகும்.

கடைசி இரு மசோதாக்களும் நமது சேமிப்பு வசதிகளுக்கு ஏற்ப அமையும் அம்சங்களாகும். ஆனால் வேளாண் வர்த்தகத்தில் தனியாரிடம் நேரில் விற்க அனுமதி என்பதை தான் பலரும் எதிர்க்கிறார்கள். அவர்கள் அச்சம் கூட்டாக சேர்ந்து மிக குறைந்த விலையை நிர்ணயம் செய்து விட்டு விவசாயிகளை மேலும் வருமானமின்றி தவிக்க வைத்து விடுவார்களோ? என்ற அச்சக்கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் தமிழகம் போன்ற விவசாயிகள் நலன் காக்கும் மாநிலங்களின் அரசின் கொள்முதல் விலையை விட குறைவாக வைத்து வாங்குபவர் இப்படி பல லட்சம் டன் விவசாய பொருட்களை எப்படி கிடங்குகளில் பத்திரப்படுத்தி வைத்து இருக்க முடியும்? அதாவது பதுக்கல் ஆசாமிகளுக்கு விலை நிர்ணய சக்தியை தரும் வல்லமை அவர்களது சேமிப்பு கிடங்குகளின் அளவை வைத்து தானே இருக்கமுடியும்! அரசின் கிடங்கு வசதிகளுக்கு இணையாக அவர்களால் போட்டி போடவே முடியாது.

மொத்தத்தில் விவசாயிகளுக்கு இப்புதிய மசோதா பெரிய பாதகத்தை ஏற்படுத்தாது என்று தான் தோன்றுகிறது. அதை தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் புரிந்து கொண்டு இப்புதிய மசோதாக்களை வரவேற்பதாக கூறியுள்ளார்.

இதனால் உற்பத்தி அதிகரிக்குமா? அப்படி அதிகரித்தால் தானே விவசாயிகளுக்கு லாபம் பெற முடியும்!

உலகெங்கும் எல்லா நாடுகளுமே விவசாய உற்பத்திக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்து வருகிறது. ஜப்பான் போன்ற சிறிய நிலப்பரப்பு நாடு கூட தொழில்நுட்ப மேன்மைகளால் அமோக விளைச்சல் கண்டு நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார்கள்.

விவசாயத்தில் பெரும் புரட்சி செய்து வரும் நாடு இஸ்ரேல் ஆகும். அவர்களது ஆராய்ச்சிகளின் பயனாக விவசாயத்துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டு வருகிறதை உலகம் பாராட்டிக் கொண்டு இருக்கிறது.

மாடி தோட்டம் என்பது போய், வீட்டிற்குள் தண்ணீரில் பயிரிட்டு அமோக விளைச்சல் காணும் நவநாகரீக விவசாய தொழில்நுட்பங்களை உருவாக்கி உள்ளனர்.

அதாவது வெறும் 500 சதுர அடி ரூமில் ஒரு ஏக்கர் விவசாயத்தில் பெறக்கூடிய விளைச்சலை பெறும் முறைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

அதுபோன்ற விவசாயத்தால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களையும் கூட ஆராய்ச்சி செய்யும் பணியில் அவர்களே ஈடுபட்டு, குறைபாடுகளை அடுத்தடுத்த கட்டங்களில் சீர் செய்து வருகின்றனர்.

நம் நாட்டில் விவசாய நிலப்பரப்பு அதிகம். நீர்நிலைகளும் அதிகமாகவே தான் இருக்கிறது. ஆனால் போதிய நீர் தேவைப்படும் போது தான் விவசாயத்திற்கு கிடைப்பதில்லை! அதாவது நீர் மேலாண்மையில் சரிவர செயல்படுவதில்லை.

இனியும் தாமதிக்காமல் நவீன கணினி பொறியாளர்களின் உதவியுடன் சாப்ட்வேர் தொழில்நுட்ப மேன்மைகளுடனும் விவசாயத்தை உயர்த்தியாக வேண்டும். தற்போதுள்ள 4 ஜி தொலைதொடர்பு வசதிகளால் விவசாயிகளுக்கு முழு நன்மை சென்றடையவில்லை. அதை எப்படி முழுமையாக விவசாயிகளுக்கு உதவ வைப்பது என்ற ஆய்வுகளில் புதிய தலைமுறை பொறியியல் மாணவர்கள் யோசிக்க வைத்தாக வேண்டும்.

இப்படி பன்முனை ஆய்வுகள் வந்து புதிய கோணத்தில் தொழில்நுட்ப வசதிகளுடன் விவசாயிகள் விவசாயம் செய்தால் மட்டுமே நமது விவசாய துறை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட முடியும்.

தற்போது உள்ள குறைந்தபட்ச விலை நிர்ணய கொள்கையால் விவசாயிகளுக்கு மிக குறைந்த வருவாய் என்பது மாறி அதே விலை ஆனால் கூடுதல் விவசாயம் என்பதால் அதிக வருமானம் என்ற பொருளாதார சூழ்நிலை உருவாகிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *