4 நாட்களுக்குள் சேதவிவர அறிக்கை வந்துவிடும்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை, டிச.28–
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை அரசால் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பயிர் சேத மதிப்பு விவரங்கள் குறித்து இன்னும் 4 நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை கிடைத்து விடும் என்று அவர் கூறினார்.
சென்னையில் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:–
அண்மையில் தமிழகத்தை நிவர் மற்றும் புரெவி என இரண்டு புயல்கள் தாக்கி, டெல்டா மாவட்ட பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில், கனமழை பொழிந்த காரணத்தால் வேளாண் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரண்டு புயல்கள் மற்றும் கனமழை ஏற்பட்டபோது அரசு உயரதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், வருவாய், உள்ளாட்சி, காவல், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல துறைகள் ஒன்றாக இணைந்து துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட காரணத்தால் பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மிகக்கனமழை ஏற்பட்டதால் வயல்களில் நீர் நிரம்பி பயிர்கள் பாதிப்படைந்ததை நேரில் ஆய்வு செய்தபோது, விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, இழப்பீட்டை ஆய்வு செய்யும் பணி வேளாண் துறை மூலமாக அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேத கணக்கு பற்றி 4 நாட்களுக்குள் அறிக்கை
வயல்களிலுள்ள வெள்ளநீர் வடிந்தால்தான், சேதாரங்களை சரியான முறையில் கணக்கிட முடியும். விவசாயிகளின் வங்கிக் கணக்கு ஆகியவையும் பெறப்பட்டு, 4 தினங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு ஆய்வறிக்கை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்யப்படுமென்று வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே, கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட கலெக்டர்களுக்கும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லி, பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசின் சார்பாக ஆலோசனைகளை வழங்கி செயல்பட்ட அமைச்சர்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள் அனைவருக்கும் இந்த நேரத்தில் அரசின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.