செய்திகள்

மெரீனா கடலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

Spread the love

சென்னை, பிப். 26–

கடலில் குளித்த போது அலை இழுத்துச் சென்றதில் கல்லுாரி மாணவர் பரிதாபமாக கடலில் மூழ்கி பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர், பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் ஹேமநாதன் (வயது 20). சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் பிஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். காலை 10.30 மணியளவில் தனது அண்ணன் மோகன் மற்றும் அக்காள் கலைவாணி, தங்கை ஜீவிதா ஆகியோருடன் மெரீனா கடற்கரைக்கு வந்தார். கடற்கரையில் ஜாலியாக சுற்றி விட்டு உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடலில் குளித்தனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை ஹேமநாதனை உள்ளே இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மோகன், கலைவாணி, ஜீவிதா ஆகியோர் கூச்சலிட்டனர்.

அங்கிருந்த பொதுமக்களும், மீனவர்களும் ஓடிவந்து கடல் நீரில் மூழ்கி தத்தளித்த ஹேமநாதனை மயங்கிய நிலையில் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே ஹேமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேமநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்துாரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *