செய்திகள்

அரசியல் கட்சி பிரதிநிதிகள், தங்கு விடுதி, அச்சக உரிமையாளர்களுடன் கலெக்டர் பொன்னையா ஆலோசனை

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள்

அரசியல் கட்சி பிரதிநிதிகள், தங்கு விடுதி, அச்சக உரிமையாளர்களுடன் கலெக்டர் பொன்னையா ஆலோசனை

திருவள்ளூர், மார்ச் 2–

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள், வங்கி அதிகாரிகள், திருமண மண்டபங்கள், தங்கு விடுதி மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் கலெக்டர் பொன்னையா ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் அனைத்து வங்கிகளின் மேலாளர்களுடனும், அதனைத் தெடர்ந்து, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுடனும் மற்றும் அச்சக பிளக்ஸ் டிஜிட்டல் பேனர் உரிமையாளர்களுடனும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பினருக்கும் தேர்தலின்போது கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு தேர்தல் தொடர்பாக சந்தேகங்களுக்கும் விரிவாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலெக்டர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவள்ளுர் மாவட்டத்திற்கு திருவள்ளுர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூவிருந்தவல்லி, மாதவரம், ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. 3622 வாக்குச்சாவடி மையங்களும், 1280 துணை வாக்குச்சவாடி மையங்களும் ஆக மொத்தம் 4902 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்வாவடி மையங்களிலும் 1050 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1334 இடங்களில் 4902 வாக்குச்சவாடி மையங்கள் அமைந்துள்ளன. 34,98,829 வாக்களர்கள் மாவட்டத்தில் உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் 30 பறக்கும் படை, 30 நிலைக்குழு, 10 ஒளிப்பதிவுக்குழு படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் உள்ளனர். இவர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு தேர்தல் விதிகளுக்கு புறம்பாக பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்கின்றனரா என்பதை கண்காணிக்கின்றனர். 6564 கண்ட்ரோல் யூனிட்டுகளும், 8388 வாக்குப்பதிவு இயந்திரங்களும். 6452 வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட 23,528 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தேர்தல் தொடர்பான புகார்களை பெற்றுக்கொள்வதற்கு 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 044-27661950 மற்றும் 044-27661951 ஆகிய இரண்டு தொலைபேசி எண்களும், வாட்ஸ்அப் எண்கள் 9445911161 மற்றும் 9445911162 ஆகிய இரண்டு எண்களில் புகார்கள் தெரிவிக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக உரிய தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்தூசமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வித்யா, 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *