செய்திகள்

மேல்மலையனூர் திருக்கோவிலில் மாசிப்பெருவிழா: பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து முன்னேற்பாடு; கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம், பிப்.14–

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசிப்பெருவிழாவினை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

வருடாந்திர மகா சிவராத்திரி, முதல் மாசிப்பெருவிழா பெரு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் இம்மாதம் 22–ந் தேதி முதல் மார்ச் 5–ந் தேதி வரை 13 நாட்களுக்கு மாசிப்பெருவிழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும், திருக்கோவில் நிர்வாகம் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, உணவு பாதுகாப்புத்துறை ஆகிய துறைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி தற்சமயம் செயல்படுத்தப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் முக்கியத் தகவலாக அதிகப்படியான காவலர்கள் பணியில் இருக்கவேண்டும், திருக்கோவில் வளாகம் மற்றும் தெருக்கள், ஊரின் முக்கிய பகுதிகளில் ஜேப்படி மற்றும் திருட்டு சம்பவங்கள் ஏற்படாதவாறு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மேலும், போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பேருந்துகள் ஒரே இடத்தில் நிறுத்துவதை காவல்துறை, இந்துஅறநிலையத்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும். மின்வாரியத்தின் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழாக்காலங்களில் 2 நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருக்கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டிவி மூலம் கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் திருக்கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா சிங், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், உதவி ஆணையர் ராமு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *