செய்திகள்

சேர்க்காடு அரசு பள்ளியில் கலெக்டர் சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு

Spread the love

வேலூர், ஜன. 29–

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், திடீர் ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மேல்நிலை வகுப்பான முதலாம், இரண்டாம் மற்றும் பத்தாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சென்ற ஆண்டு மார்ச் 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் குறைந்த தேர்ச்சி விழுக்காடு பெற்றதால், இந்தாண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கி ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மார்ச் 2019-ம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் 72.9 சதவீதமும், பதினொன்றாம் வகுப்பில் 75 சதவீதமும், பத்தாம் வகுப்பில் 54 சதவீதத்தில் மதிப்பெண்கள் எடுத்ததின் காரணத்தை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு மற்றும் எழுதுதல், வாசித்தல் பயிற்சிகள் அளிக்கவும், ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு போதிக்கும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார். பின்னர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு உயர்த்த ஆசிரியர்களிடம் தனித்தனியாக பாட வாரியாக ஆய்வு செய்தும், ஏழாம் வகுப்பில் உள்ள மாணவர்களை தமிழ் வாசிக்க செய்து மெல்லக்கற்கும் மாணவர்களை தனியாக ஒரு மணிநேரம் இயல்பு வாசித்தல் பயிற்சி அளிக்கவும், கணக்கு பாடத்தில் தனி கவனம் செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு கற்பித்து தர வேண்டும் என்றும், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் மற்றும் வாரம், மாதம் முறைப்படி சோதனை தேர்வு நடத்த வேண்டும் எனவும், மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்தும், மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், படிப்புக்கு வறுமை கிடையாது, வறுமையில் இருப்பவர்கள் அதிகம் படிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் பங்கு மிக முக்கியமானது என்றும் கூறினார்.

பின்னர் சத்துணவு மையத்தை பார்வையிட்டும், மதிய உணவை சுவைத்தும் பார்த்தார். பின்னர் பள்ளியின் குடிநீர் வசதி குறித்து கலெக்டர் கேட்டறிந்தும், நீர் வளம் உள்ள இடத்தில் புதிய போர்வெல் அமைத்து தர வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டும், நீண்ட நாள் விடுப்பில் உள்ள இயற்பியல் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வேலூர் முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *