செய்திகள்

பூண்டியில் பொங்கல் விழா: கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்

திருவள்ளூர், ஜன. 13–

பூண்டி பேருந்து நிலையம் அருகே பொங்கல் விழாவை மாவட்ட கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்.

திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், பூண்டி பேருந்து நிலையத்தில் சுற்றுலாத்துறை சார்பாக, நடைபெற்ற பொங்கல் விழா-வில், மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா மண் பானையில் பொங்கல் வைத்து, கலைக்குழுவின் தப்பாட்டத்தை பார்வையிட்டு, கோலப்போட்டியில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பாக, அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் பொங்கல் விழா 2021 முன்னிட்டு, பூண்டி ஊராட்சி ஒன்றியம், பூண்டி ஊராட்சியில் பொங்கல் விழா அணுசரிக்கப்படுகிறது.

பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் கிராமிய மனம் வீசும் மண் பானைகளில் பொங்கல் வைத்து, தமிழரின் பாரம்பரியமான பறை வாயிலாக சக்தி கலைக்குழுவினரால் தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தமிழரின் தொன்மைகளை கடைபிடிக்கும் வகையில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றது. இரண்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாயிலாக கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் வெங்கட்ரமணா, துணைத்தலைவர் மகாலாட்சுமி, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன் (வ.ஊ.), ராமகிருஷ்ணன் (கி.ஊ.), பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா, மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *