செய்திகள்

வாகன ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்: திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா துவக்கி வைத்தார்

திருவள்ளூர், ஜன. 29–

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, திருவள்ளுர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமினை கலெக்டர் பா.பொன்னையா துவக்கி வைத்து நடமாடும் சாலை பாதுகாப்பு வாகன கண்காட்சியை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவானது கடந்த 18 ஜனவரி, 2021 அன்று துவங்கி பிப்ரவரி 17, 2021 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்று வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் சென்னை சங்கரா நேத்ராலையா மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப் படுகிறது. இம்முகாமில் 40 வயதுக்கு மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் தாமாகவே முன்வந்து தங்களது கண்களை பரிசோதனை செய்து கொள்ளலாம். இன்று இலவசமாகவே இந்த சேவையை போக்குவரத்து துறை சார்பாக வழங்குவதால் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சாலைகளில் நடக்கும் விபத்துகளை வெகுவாக குறைத்து விபத்தில்லா தமிழகம் அமைய வழி வகுக்கு வேண்டும். திருவள்ளுர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தேர்வு, புதுப்பித்தல் மற்றும் புதிய வாகன பதிவு தொடர்பான பணிகளுக்கு வந்த நபர்களிடம் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிதல் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் பா.பொன்னையா கூறினார்.

இம்முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன், திருவள்ளுர் வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கே.பன்னீர்செல்வம் (திருவள்ளுர்), லீலாவதி (திருத்தணி) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *