செய்திகள்

குடியாத்தம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்தில் வங்கி கடன் உதவி

Spread the love

வேலூர், பிப்.27–

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மையத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களின் 48 பெண்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் வங்கி கடன்களையும், சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 10 நபர்களுக்கு ரூ.50 ஆயிரமும், தென்னை மரம் ஏறும் கருவிகள் 10 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில், சாலையோர வியாபாரிகளிடம் வியாபாரம் தொடர்பான தகவலை கேட்டறிந்தார். பாவேடுத்தோப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கைத்தறி துணிகள் நெய்யப்படுவதையும், பாவேடுத்தோப்பில் ஊதுபத்தி உற்பத்தி செய்யப்படுவதையும், அதனைத் தொடர்ந்து ஏர்த்தாங்கல் அம்மன் நகரில் குறிஞ்சி மலர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிமெண்ட் உறை தயாரிக்கப்படுவதையும்,

ஏர்த்தாங்கல் குட்டை மேட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கோழிப்பண்ணை வளர்ப்பதையும், ஏர்த்தாங்கல் கிராம ஊராட்சி சேவை மையம் செயல்படுவதையும், கன்னிகாபுரத்தில் வெல்மா மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் விற்பனை அங்காடியையும், ரங்காசமுத்திரம் ரேணுகாம்பாள் மகளிர் சுய உதவிக் குழுவும், ஓம்சக்தி மகளிர் சுய உதவிக் குழுவும் மூங்கிளில் இருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும் நேரில் பார்த்தார்.

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் வடுகந்தாங்கல் ஊராட்சியில் 39 கிராம ஊராட்சிகளில் செயல்படும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டம் திறந்து வைத்து மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் ஏற்கனவே தொழில் செய்து கொண்டு இருப்பவருக்கும் புதியதாக தொழில் செய்ய உள்ளவர்களுக்கும் தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் நிதி உதவிகள் இத்திட்டத்தின் மூலமும் பிற துறையின் மூலம் பெற்று தருவதன் நோக்கம் குறித்து மாவட்ட கலெக்டர் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் (கே.வி. குப்பம்) ஜி.லோகநாதன், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வேலூர் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரவி, உதவி திட்ட அலுவலர் (நகர்புற வாழ்வாதார இயக்கம்) ஜெயகாந்தன், உதவி திட்ட அலுவலர்கள் திருமேனி, வெங்கடேசன், வில்லியம், வட்டாட்சியர்கள் வத்சலா (குடியாத்தம்), சுஜாதா (கே.வி குப்பம்) மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *