செய்திகள்

வேலூரில் தேர்தல் பணியாளர்களின் பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வேலூர், மார்ச் 3–

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பயிற்சிக்காகவும், வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வேலூர் மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 10 வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேலூர் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகம்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

தவிர, மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு பொதுமக்களுக்கு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அத்துடன், தேர்தல் பணியாளர்களுக்கு வாக்குப்பதிவு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்து அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தலா 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படாது. தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வுகள் அனைத்தும் முடிந்ததும் இந்த இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைக்கப்படும். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் ஆணையக் கிடங்குக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *