போஸ்டர் செய்தி

17 பேரின் குடும்பங்களுக்கு எடப்பாடி நேரில் ஆறுதல்

Spread the love

கோவை, டிச.3–

கோவை மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆறுதல் கூறினார்.

இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற முதலமைச்சர் அங்கிருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் சென்றார்.

உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினமே உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வீடுகளின் மீது சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் சுவர் கட்டிய வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் இன்று கைது செய்யப்பட்டார்.

15 அடி சுவர் சாய்ந்து விழுந்தது

மேட்டுப்பாளையத்தில் ஆனந்தகுமார், அருக்காணி, சிவகாமி ஆகியோரது வீடுகளுக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான 17 அடி நீளம் 15 அடி உயரம் கொண்ட வீட்டு காம்பவுண்ட் சுவர் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் பலத்த மழையால் காம்பவுண்ட் சுவர் திடீரென இடிந்து 3 வீடுகளின் மேல் விழுந்தது. அதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 12 பெண்கள், மூன்று ஆண்கள், இரண்டு குழந்தைகள் என 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆனந்த் (வயது 40), அவரது மனைவி நதியா (30), மகன் லோகு ராம் (7), மகள் அக்ஷயா (9) மற்றும் அருக்காணி (55), அவரது அம்மா சின்னம்மாள் (72)அக்கா ருக்குமணி (40), மகள்கள் ஹரிஷ் சுதா (17), மகாலட்சுமி (14) மற்றும் சிவகாமி (50), மகள் வைதேகி (22), அம்மா ஓபம்மாள், அவரது உறவினர் மகன் ராமநாதன் (15), மகள் நிவேதா (18) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த மங்கம்மாள், திலகவதி (50), குருசாமி (45) என 17 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடல்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் கலெக்டர் ராசாமணி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட எஸ்பி சுஜித் குமார், ஆர்டிஓ சுரேஷ், ஏடிஎஸ்பி அனிதா, டிஎஸ்பி மணி, இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

மீட்கப்பட்ட உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அடுத்து மேட்டுப்பாளையத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

உரிமையாளர் கைது

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சுவர் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இன்று மதியம் சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

17 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்

வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். இன்று மேட்டுப்பாளையம் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல திட்டமிட்டிருந்தார்.

அதன்படி இன்று மதியம் 12.50 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார். அங்கிருந்து கார் மூலம் முதலமைச்சர் மேட்டுப்பாளையம் செல்கிறார். அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். சுவர் இடிந்து விழுந்த இடத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேற்று அறிவித்தபடி நிதி உதவியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்குவார் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *