செய்திகள்

ரூ.28 ஆயிரம் கோடியில் 28 புதிய தொழில்கள்: எடப்பாடி இன்று ஒப்பந்தம்

புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

ரூ.12 லட்சம் கோடி முதலீடு: 40 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு

ரூ.28 ஆயிரம் கோடியில் 28 புதிய தொழில்கள்:

எடப்பாடி இன்று ஒப்பந்தம்

10 புதிய தொழிற்பூங்காக்களுக்கு அடிக்கல்

ரூ.3489 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தார்

சென்னை, பிப்.16–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஆகியவற்றை வெளியிட்டார்.

ரூ.28,053 கோடி முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன் கையெழுத்திடப்பட்டன.

10 புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் அடிக்கல் நாட்டுதல் மற்றும் ரூபாய் 3,489 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம் என மொத்தம் 46 திட்டப்பணிகளை ரூ.33,465 கோடி முதலீட்டில் 2,19,714 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மாபெரும் விழா நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று, ஹோட்டல் லீலா பேலஸில் தொழில் துறை சார்பில் மாபெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கீழ்க்கண்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன:-

புதிய தொழில் கொள்கை வெளியீடு

தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்க புதிய தொழில் கொள்கை 2021 வெளியிடப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்திடவும், 2030ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 30 சதவிகிதமாக உயர்த்திடவும் இலக்கு நிர்ணயித்து, புதிய வெற்றிப் பயணத்தினை துவக்கி வைத்து, இந்த புதிய தொழிற் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த தொழிற்கொள்கையை வெளியிட இதனை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையினைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. இதனை முதலமைச்சர் வெளியிட ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் பெற்றுக்கொண்டார்.

வளர்ச்சியை பரவலாக்கிடவும், சோதனைகளை சாதனையாக்கும் திறமை நிறைந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் இலக்கு நிர்ணயித்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கை வெளியிடப் பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மேலும், 28,053 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 68,775 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த முதலீடுகள், மின் வாகனங்கள், காற்றாலை எரிசக்தி, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், நகர எரிவாயு விநியோகம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

இவை தவிர தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் இங்கிலாந்து – இந்தியா வணிக சபை இடையே ஒரு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

தொழிற் திட்டங்களை துவக்கி வைத்தார்

மேலும், முதலமைச்சர் 3377 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 7139 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களையும் துவக்கி வைத்தார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

தபால் தலை வெளியீடு

சிப்காட் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டினையொட்டி தபால் தலை வெளியிடப்பட்டது. 1971ம் ஆண்டில் நிறுவப்பெற்ற இந்நிறுவனம், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 15 மாவட்டங்களில், ஏறத்தாழ 34000 ஏக்கர் நிலப்பரப்பளவில் பரந்து விரிந்து, 6 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட 23 தொழில் பூங்காக்களை உருவாக்கிச் சாதனை புரிந்துள்ளது. சிப்காட் நிறுவனத்தின் திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற் பூங்காக்களில் தொழில் புத்தாக்க மையங்கள் துவக்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு புத்தாக்க மையமும், 20 கோடி ரூபாய் திட்ட செலவில், பொருத்தமான தொழில் நுட்ப பங்குரிமையாளருடன் வடிவமைத்து, பராமரிக்கக் கருதப்பட்டு வருகிறது. இந்த முயற்சியினால், மேம்பட்ட உற்பத்தி, வருங்கால நகர்வு, வானூர்திப் பூங்கா பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றிற்கான அடிப்படையில், தொழில் திட்டங்களில், தொழில்நுட்பத்தினை உரித்தாக்கிக் கொள்ளுதலை விரைவுபடுத்திட தமிழ்நாடு அரசு கருதி வருகிறது.

புதிய தொழிற்பூங்காக்களுக்கு அடிக்கல்

சிப்காட் நிறுவனத்தின் மணப்பாறை (1077.04 ஏக்கர் நிலப்பரப்பு, 500 கோடி ரூபாய் முதலீடு), மாநல்லூர் (691.587 ஏக்கர் நிலப்பரப்பு, 250 கோடி ரூபாய் முதலீடு), ஒரகடம் (476.12 ஏக்கர் நிலப்பரப்பு, 375 கோடி ரூபாய் முதலீடு) மற்றும் தர்மபுரி (1733.40 ஏக்கர் நிலப்பரப்பு, 480 கோடி ரூபாய் முதலீடு) ஆகிய இடங்களில், 4 புதிய தொழிற் பேட்டைகள் உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம், ஆட்டோ உதிரி பாகங்கள், உணவு பதனிடுதல், மின்சார வாகன உற்பத்தி, தானியங்கி ஊர்திகளுக்கான உதிரிபாகங்கள், பொது பொறியியல் தொழில்கள் மற்றும் துணி உற்பத்தி ஆகிய சேவைகளுக்கான தொழில் திட்டங்களுக்கு தேவையான சேவைகளை வழங்கிடும். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பினையும் உருவாக்கித் தரும்.

கோவையில் டைசல் உயிரி தொழில் நுட்ப பூங்கா

அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், 10 ஏக்கர் பரப்பளவில், 2.29 லட்சம் சதுர அடியில், 74 அடி உயரத்திற்கு, ஒரு புத்தம் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது, இந்த மாவட்டத்திலேயே உயரமான கட்டிடமாக 13 தளங்கள் + நிலத்தளம் என்ற வகையிலும், உயிரியல் தொழில் நுட்பம், மருத்துவ தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் நுண் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் செயல்படும் துறைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகளை வழங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் 6 புதிய தொழிற்பேட்டைகள் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 280 ஏக்கர் பரப்பில் செங்கற்பட்டு மாவட்டம், ஆலத்தூர், சேலம் மாவட்டம், பெரிய சீரகப்பாடி மற்றும் உமையாள்புரம், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கோலப்பாடி மற்றும் நாமக்கல் மாவட்டம், ராசம்பாளையம் ஆகிய இடங்களில் உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 13,300 நபர்கள் வேலைவாய்ப்பினை பெறுவர்.

அடுக்குமாடி தொழிற்கூட தொகுப்பு கட்டிடம்

கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் 250 தொழிற்கூடங்களுடன் கூடிய அடுக்குமாடி தொழிற்கூட தொகுப்பு கட்டிடங்கள் கட்ட 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 3500 நபர்கள் வேலைவாய்ப்பினை பெறுவர்.

கோவை, மதுரையில் தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல்

இரண்டு புதிய தனியார் தொழிற்பேட்டைகள் கோயம்புத்தூர் மாவட்டம், கல்லப்பாளையம் மற்றும் மதுரை மாவட்டம், மேலவளைவு ஆகிய இடங்களில் 17 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 8400 நபர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பினை பெறுவர்.

பொது உற்பத்தி கட்டமைப்பு மையங்கள்

இரண்டு பொது உற்பத்தி கட்டமைப்பு மையங்கள் திருப்பூர் மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் அட்டை பெட்டி தயாரிப்பு குழுமம் மற்றும் சேலம் மாவட்டம், சிவதாபுரத்தில் வெள்ளி கொலுசு தயாரிப்பு குழுமங்களிற்கு மொத்தம் 4.25 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 6.5 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டன. இவற்றின் மூலம் குறுந்தொழில் நிறுவனங்கள் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பளித்து ஆண்டுக்கு சுமார் 350 கோடி ரூபாய் விற்று முதல் ஈட்டுவர். மேலும், இரண்டு புதிய பொது பயன்பாட்டு கட்டிடங்கள் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் மற்றும் தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி தொழிற்பேட்டைகளில் திறந்து வைக்கப்பட்டன.

வர்த்தக ஊக்குவிப்பு மையங்கள்

சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களில் வர்த்தக ஊக்குவிப்பு மையங்கள் 15 கோடி ரூபாய் மாநில அரசின் நிதி உதவியுடன் மொத்தம் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட மாவட்ட தொழிற்சங்கங்களுக்கு 17.43 ஏக்கர் நிலம் முதலமைச்சரால் வழங்கப்பட்டது.

பொன்விழா ஆண்டு: சிட்கோ இலச்சினை வெளியீடு

சிட்கோ நிறுவனத்தின் பொன்விழா ஆண்டினையொட்டி, சிட்கோ நிறுவனத்தின் இலச்சினை மற்றும் பொன்விழா இலச்சினை ஆகியவை வெளியிடப்பட்டது. மேலும், சிட்கோ நிறுவனத்தின் பொன்விழா ஆண்டின் நினைவாக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிண்டி தொழிற்பேட்டையில் பொன்விழா வளைவு அமைக்கப்படும்.

ஈரோட்டில் கயிறு உற்பத்தி குழுமம்

முதலமைச்சர் 1811.92 லட்சம் ரூபாய் திட்டமதிப்பிலான ஈரோடு மாவட்டம் நொய்யல் கயிறு குழுமம் உள்ளிட்ட இரு கயிறு உற்பத்திக் குழுமங்களை துவக்கி வைத்துள்ளார். இக்குழுமங்கள் புவிசார்ந்த (நார்) ஜவுளிகள், கயிறு (நார்) கட்டிகள் மற்றும் மிதியடிகள் உற்பத்தியில் ஈடுபட்டு 600 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் அளிக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்புக்கான இலச்சினை மற்றும் வலைத்தளம் ஆகியவற்றை முதலமைச்சர் வெளியிட்டார்.

சிறந்த தொழில் முனைவோர்களுக்கான விருது

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் சிறந்த தொழில் முனைவோர், சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதி தொழில் முனைவோர், சிறந்த மகளிர் தொழில் முனைவோர், சிறந்த வேளாண் சார்ந்த தொழில் முனைவோர் ஆகிய பிரிவுகளில், சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கும் மேலும் இத்துறைக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கும் முதலமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

பிஸ்னஸ் டுடே நிறுவனத்தின் தொழில் நிறுவனங்களுக்கான விருதுகள் தமிழ்நாட்டில் 11 தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு:–

மிகப்பெரிய உள்நாட்டு பொதுத்துறை முதலீட்டாளர் விருது – சி.பி.சி.எல்

மிகப்பெரிய உள்நாட்டு தனியார் முதலீட்டிற்கான விருது – எம்.ஆர்.எப்.

மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டிற்கான விருது – ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட்,

பின்தங்கிய மாவட்டங்களில் மிகப்பெரிய முதலீட்டிற்கான விருது – ஐ.டி.சி. லிமிடெட்

வளர்ந்து வரும் துறையில் மிகப்பெரிய முதலீட்டிற்கான விருது – பாக்ஸ்கான் குரூப்

மிக அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனம் – செய்யார் சீஸ் டெவலப்பர்ஸ்

மிக அதிக அளவில் மகளிருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனம் – பரிதா குரூப்

பின்தங்கிய மாவட்டங்களில் மகளிருக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனம் – செய்யார் சீஸ் டெவலப்பர்ஸ்

மிகப்பெரிய ஏற்றுமதியாளர் விருது – ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட்,

மிகச்சிறந்த தொழில் பூங்காவிற்கான விருது – மகேந்திரா வேர்ல்டு சிட்டி

வெற்றிகரமாக சிறந்த முறையில் புத்துயிரூட்டப்பட்ட தொழில் திட்டத்திற்கான விருது – சால்காம்ப் உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் கே. ராஜீவ் ரஞ்சன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில் துறை ஆணையர் அனு ஜார்ஜ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் டாக்டர் டாரஸ் அகமது, சிட்கோ மேலாண்மை இயக்குநர் இரா.கஜலட்சுமி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *