நாடும் நடப்பும்

பணி ஓய்வு வயதை அதிகரித்தார் முதல்வர்

சமீபமாக தமிழகம் உடல் ஆரோக்கிய விவகாரங்களில் சாதனை படைத்து முன்னணியில் இருப்பதை கண்டு வருகிறோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கருவில் இருக்கும் சிசு முதல் முதியோர் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தந்து பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார்.

பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கு சத்து மாத்திரைகள், தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை இலவசமாக வழங்கினார்.

அதனால் நல்ல ஆரோக்கியமான ‘கொலு–கொலு’ குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்தது.

பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்க மருந்து மாத்திரைகள் தந்து அவர்களது தாய்பால் பல மாதங்களுக்கு தரும் சக்தியை அதிகரிக்க செய்தார்.

பிறந்த குழந்தைகளுக்கு உரிய தடுப்பூசிகள் தர வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் பெற வைத்து குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய மருந்து மாத்திரைகளையும் தர வைத்தார்.

வயதானவர்களுக்கு இலவச ரத்த பரிசோதனைகள், முழு உடல் பரிசோதனைகளையும் வழங்கினார்.

இப்படியாக தமிழகம் ஆரோக்கியமாக வாழ பலருக்கு உதவினார், தமிழகத்தில் மருத்துவ புரட்சியையும் வித்திட்டார்.

அவர் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மருத்துவத்துறை சிறப்பாக இயங்க வைத்து வருவதை கண்டோம்.

குளிப்பாக கடந்த ஆண்டில் கொரோனா பெரும் தொற்றை சமாளிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமுல்படுத்திய வேகம் தமிழகத்தை ஆச்சரியப்பட வைத்தது.

இப்படியாக தமிழக மக்களின் பூரண உடல் ஆரோக்கிய மேன்மையால் இறப்பு வயது 75–ஐயும் தாண்டி விட்டது.

ஐம்பது வயதைத் தாண்டி விட்டால் அதுவே சாதனை என்பது மாறி 70 வயதிலும் ஆரோக்கியமாக நடைபோடும் தமிழர் எண்ணிக்கை மிக அதிகமாக வருவதால் பணி ஓய்வு வயது வரம்பையும் உயர்த்திட முடிவு செய்து விட்டனர்.

ஆகவே தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 59–ல் இருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தமிழக அரசுப் பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58–ல் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59 என்பது 60 ஆக உயர்த்தப்படும். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் இந்த ஆண்டு மே 31–ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

தெலுங்கானா, கோவா, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு–காஷ்மீர், லடாக் மிசோராம், மணிப்பூர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 58 ஆகவும், ஜார்க்கண்ட், கேரளாவில் 56 ஆகவும் ஓய்வு வயது உள்ளது. ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, அசாம், பீகார், மேகாலயா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, குஜராத், உத்தராகண்ட், உத்திரபிரதேசத்தில் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. மேற்கு வங்கத்தில் மருத்துவ பேராசிரியர்களுக்கு 65 ஆகவும் மருத்துவர்களுக்கு 62 ஆகவும் அரசு ஊழியர்களுக்கு 60 ஆகவும் உள்ளது.

அறுபது வயதில் நல்ல அனுபவசாலிகள் பணி ஓய்வு காரணமாக வெளியேறி விட்டால் நல்ல திறன்மிகு பணியாளர்களை இழந்து விடுவோம் அல்லவா? அதை மாற்றிடும் முயற்சி நல்ல பலன் தரும் என்பது உறுதியாகும்.

இனி 60 வயதையும் பூர்த்தி செய்தவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் அதிக உடல் அயர்ச்சியை தரும் வேலைகள் இன்றி பிற இலகுவான பணிகளில் இடைக்கால பணியாளர்களாக நியமிக்கலாம்.

குறிப்பாக பூங்காக்களை மேற்பார்வையிடுவது, அருங்காட்சியங்களில் காட்சிப் பொருட்களை பற்றிய விவரம் தரும் அறிவிப்பாளர்களாக பணியாற்றுவது, கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு ஆலோசகர்களாக பணியாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட வைக்க யோசிக்கலாம்.

இப்படி புதிய வேகத்துடன் செயல்பட முதியவர்கள் பணி நிமித்தம் செய்யப்பட்டால் ஓய்வூதியத்துடன் கூடுதலாக சிறிய சம்பளத் தொகையும் பெற முடியும்.

இப்படி ஓய்வு பெற்ற பிறகும் சிறு சிறப்பான வாழ்வை தொடர்ந்தால் வீட்டில் உள்ள இதர இளைஞர்களுக்கும் நல்ல முன் உதாரணமுமாக இருப்பார்கள் அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *