செய்திகள்

உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் உதவி

மதுரை துணிக்கடைத் தீ விபத்தில்

உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் உதவி

எடப்பாடி பழனிசாமி உத்தரவு

குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி

மதுரை, நவ.15 –

மதுரை துணிக்கடைத் தீ விபத்தில் அக்கட்டிடம் இடிந்து விழுந்த போது அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன், பி.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் துரதிஷ்டவசமாக உயிரிழந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை துணிக்டை தீவிபத்து தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மதுரை மாநகர் மதுரை தெற்கு வட்டம் தல்லாகுளம் நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்டையில் நேற்று (14–ந் தேதி) காலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கட்டடம் இடிந்து விழுந்த போது, அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் கே. சிவராஜன் மற்றும் பி. கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமடைந்தேன்.

ஆழ்ந்த இரங்கல்

கடமை ஆற்றும்போது ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன் மற்றும் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் ஆர்.கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகிய இருவரும் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம்

கடமையாற்றும் போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும் தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் தலா பதினைந்து லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும் ஆக மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும்; அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

காயமடைந்த தீயணைப்பாளர்கள் கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்து வழங்கவும் அவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *