செய்திகள்

விருதுநகர் பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்

விருதுநகர் பட்டாசு வெடி விபத்து:

உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்

எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி

சென்னை, பிப்.13-

விருதுநகர் அச்சன்குளம் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் 12-ந் தேதி (நேற்று) ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த துயர சம்பவத்தில் அகால உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெடி விபத்தில் 30 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயம் அடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

உரிய பாதுகாப்பு; கவனம்

கோடைகாலம் விரைவில் தொடங்க இருப்பதாலும், கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், விருதுநகர்–சாத்தூரில் நிகழ்ந்த தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு காயமுற்றோர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித்

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், 30 பேர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தமிழக மக்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் இரங்கல்: குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் உதவி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அச்சன்குளம் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலர் பலியாகி இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், பலியானோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் பலர் ஆலைக்குள் சிக்கி இருப்பதாக வெளியாகும் தகவல்கள், நெஞ்சை கசக்கிப் பிழிகின்றன. உடனடியாக மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *