செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது

அடுத்தடுத்து 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது

முதலமைச்சர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது

புதுச்சேரி, பிப்.16–

புதுச்சேரியில் அடுத்தடுத்து 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.

அதைத்தொடர்ந்து புதுவை காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நாளை புதுவைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் வரும் நிலையில் இந்த அதிரடி திருப்பங்கள் காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலையினை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் 30.

முதலமைச்சர் நாராயணசாமி மீது அதிருப்பதி ஏற்பட்டு அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை கடந்த சில நாட்களாக ராஜினாமா செய்து வருகிறார்கள்.

தனவேலு தகுதி நீக்கம், நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ராஜினாமாவை தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாகியை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் ஆட்சிக்கு உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.வான ஜான்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார்.

இவர் நெல்லித்தோப்பு தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். முதல்வர் நாராயணசாமி தேர்தலில் போட்டியிட வசதியாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர். அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாராயணசாமி முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.

தற்போது சட்டசபையில் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் – 7, அண்ணா தி.மு.க. – 4, பாரதீய ஜனதா – 3 என மொத்தம் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் இரு தரப்பும் சம பலம் உள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மை இழந்தார்; அதைத்தொடர்ந்து புதுவை காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதுச்சேரி டிஜிபி ரன்விர் சிங், முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கந்தசாமி கூறுகையில், ‛புதுச்சேரி அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் அமைச்சரவையை நாங்களாகவே கலைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கவர்னர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் கெடுபிடியால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம் என்றார். இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செயவாரா? அவர் தலைமையிலான மைனாரிட்டி ஆட்சியை மத்திய அரசு நீக்குமா? இல்லை சட்டசபையை கூட்டி பலத்தை நிரூபித்து காட்டுமாறு கவர்னர் உத்தரவிடுவாரா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இடையே புதுவை அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *