செய்திகள்

தென்காசி மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்

Spread the love

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்; நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

சென்னை, நவ. 21–

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு, புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களுக்கான தொடக்க விழாவுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முதலாவதாக, தென்காசி மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நாளை (22ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார்.

தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்கிறார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றுகிறார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி முன்னிலை வகிக்கின்றனர். தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நன்றி கூறுகிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார். இரவில் தூத்துக்குடியில் தங்கும் அவர், நாளை காலை அங்கிருந்து விழா நடைபெறும் தென்காசிக்கு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *