செய்திகள்

அரக்கோணத்தில் ரூ.1.90 கோடியில் வணிகவரி அலுவலக கட்டிடம்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

சென்னை, பிப்.24–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், வணிகவரித் துறை சார்பில் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் 1 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் 14 கோடியே 30 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

வணிகவரித் துறையின் 2018–19ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரக்கோணத்தில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் வணிகவரி அலுவலகத்தில் 2,045 பதிவுபெற்ற வணிகர்கள் உள்ளனர். தனியார் கட்டடத்தில் செயல்படும் இவ்வலுவலகத்திற்கு அரக்கோணம் நகரின் மையப்பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் 1 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன், 710.76 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இப்புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடமானது, அரக்கோணம் மற்றும் திருத்தணி வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. மேலும், இக்கட்டடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

வணிகவரித் துறையின் 2020–2021ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், வணிகவரித் துறை அலுவலகங்களுக்கு வருகை தரும் வணிகப் பெருமக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டுவது அரசின் நோக்கமாகும். எனவே, ஈரோடு இணை ஆணையர் (வணிகவரி), இணை ஆணையர் (நுண்ணறிவு), துணை ஆணையர் (நுண்ணறிவு), உதவி ஆணையர் (நுண்ணறிவு), மேல்முறையீட்டு துணை ஆணையர் (சரக்குகள் மற்றும் சேவைகள் வரி), உதவி ஆணையர் (வணிகவரி), திண்டல் மற்றும் கொடுமுடி ஆகிய அலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை கிராமத்தில் 14 கோடியே 30 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், முதன்மைச் செயலாளர், வணிகவரி ஆணையர் எம்.ஏ.சித்திக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *