செய்திகள்

கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரூ.6,375 கோடியில் அத்திப்பட்டு அமைக்கப்பட்டு வரும் அனல் மின் திட்டத்தின்

கொதிகலன் எரியூட்டும் நிகழ்வினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை, பிப். 24–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் – அத்திப்பட்டில், 6,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரியில் இயங்கும் 1×800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை-–3 செயல்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக காணொலிக் காட்சி மூலமாக கொதிகலன் எரியூட்டும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், முக்கிய காரணியாக விளங்கும் மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் கொண்டு, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், மின் உற்பத்தியை பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடரமைப்புகளை நிறுவுதல், மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் போன்ற பணிகளை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

ஆகஸ்டில் நிறைவு பெறும்

திருவள்ளூர் மாவட்டம் – அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் 250 ஏக்கர் நிலப் பரப்பளவில், 6,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் 1×800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை–3 அமைப்பதற்கு புரட்சித் தலைவி அம்மா அடிக்கல் நாட்டினார்.

மிக உய்ய அனல் மின் தொழில் நுட்பத்தில் 800 மெகாவாட் திறனுடைய அலகு தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய சிறப்புமிக்க வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை–3 செயல்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக கொதிகலன் எரியூட்டும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

இத்திட்டம் ஆகஸ்டு 2021–ல் நிறைவு பெற்று, நாளொன்றுக்கு 19.2 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6,000 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சல், பாரத மிகுமின் நிறுவனம் மற்றும் பிஜிஆர்எஸ்எல் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *