செய்திகள்

செங்கல்பட்டு, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ.5½ கோடி செலவில் புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்கள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில்

செங்கல்பட்டு, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில்

ரூ.5½ கோடி செலவில் புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை, பிப்.24–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 5 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்குதல், புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்களை துவக்கி வைத்தல், புதிய பணிமனைகள், பேருந்து நிலையங்கள், அலுவலகங்கள் போன்ற கட்டடங்களை கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள், சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மாவின் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் – குரோம்பேட்டையில் 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டையில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்டம் – வேலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் சார்பில் நாமக்கல் மாவட்டம் – ஆதனூரில் 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்) லிமிடெட் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் – பொள்ளாச்சியில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சி மாவட்டம் – திருச்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

அரியலூர் மாவட்டம் – அரியலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரம்பலூர் மாவட்டம் – பெரம்பலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல்லில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாவட்டம் – மேலூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்கள்

மற்றும் விருதுநகர் மாவட்டம் – விருதுநகரில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை, என மொத்தம் 6 கோடியே 74 லட்சம் ரூபாய் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

விபத்து ஏற்படுத்திய டிரைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

இப்புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்களை செயல்படுத்துவதன் மூலம், அப்பகுதியிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்களுக்கும், இதர தனியார் வாகன ஓட்டுநர்களுக்கும் தரமான ஓட்டுநர் பயிற்சி வழங்கவும், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி அளித்து மேற்கொண்டு எவ்வித விபத்தும் ஏற்படாதவாறு அவர்களின் ஓட்டுநர் திறனை மேம்படுத்திடவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், போக்குவரத்துத் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *