செய்திகள்

வேலூரில் அதி நவீன ‘நறுவீ’ மருத்துவமனை: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

* ரூ.600 கோடி செலவில் 5 லட்சம் சதுரடியில் 14 தளங்கள்

* 500 படுக்கை வசதிகளுடன் சர்வதேச தரத்தில் சிகிச்சை

வேலூரில் அதி நவீன ‘நறுவீ’ மருத்துவமனை:

எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை, பிப்.6-

வேலூரில் சர்வதேச தரத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய ‘நறுவீ ’ மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

வேலூரில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யொட்டி ‘நறுவீ’ மருத்துவமனை ரூ.600 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 500 படுக்கை வசதிகளுடன் 2 கீழ் தளங்கள், தரை தளம் மற்றும் 11 மாடிகளுடன் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 21 சிறப்பு சிகிச்சை பிரிவுகளும், 10 அதிதீவிர சிகிச்சை பிரிவுகளும் நிறுவப்பட்டுள்ளன.

இந்த மருத்துவமனையை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, நறுவீ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.வி.சம்பத், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜி.வி.சம்பத்

நிகழ்ச்சியில் ‘நறுவீ’ மருத்துவமனையின் தலைவர் ஜி.வி.சம்பத் பேசும்போது ‘‘இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், சிறந்த நிர்வாகம், தொழிலாளர் உறவு இருக்கும் மாநிலமாகவும், சட்டம்–ஒழுங்கு பிரச்சினை இல்லாத மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. இந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ள முதல்வருக்கு நன்றி’’ என்றார்.

நிகழ்ச்சியில் ஏ.சி.சண்முகம் பேசும்போது, ‘‘வேலூருக்கு மேலும் ஒரு மகுடமாக இந்த மருத்துவமனை வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. பல துறைகளில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இதில், முத்தாய்ப்பாக சுகாதாரத் துறை விளங்குகிறது. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்ததுடன் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். மருத்துவத் துறையில் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழகம் இருக்கிறது’’ என்றார்.

முடிவில், ‘நறுவீ’ மருத்துவமனையின் துணைத் தலைவர் அனிதா சம்பத் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி மணிமாறன், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்தன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *