செய்திகள்

ரூ.66 கோடி செலவில் துணைமின்நிலையங்கள்: எடப்பாடி துவக்கினார்

* வேதாரண்யத்தில் ரூ.24 கோடியில் 110/11 கி.வோ. துணைமின்நிலையம்

* செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் ரூ.42 கோடி துணைமின்நிலையம்

ரூ.66 கோடி செலவில் துணைமின்நிலையங்கள்:

எடப்பாடி துவக்கினார்

சென்னை அண்ணா சாலையில் ரூ.56 கோடியில் மின் தொடரமைப்பு கட்டிடத்தையும் திறந்தார்

சென்னை, பிப்.9–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யத்தில் 23 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ. தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு, தருமபுரி, கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 42 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 6 துணை மின் நிலையங்கள், சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 56 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கான புதிய தலைமை அலுவலகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.

அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யத்தில் 23 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ. தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் – திருப்போரூர் (விகிதாசார அறிமுகம்); தருமபுரி மாவட்டம் – பொம்மிடி (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்), திருவண்ணாமலை மாவட்டம் – காரப்பட்டு ஆகிய இடங்களில் 23 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்;

விழுப்புரம் மாவட்டம் – பூத்தமேட்டில் 8 கோடியே 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 110/22 கி.வோ. துணை மின் நிலையம்; தஞ்சாவூர் மாவட்டம் – தஞ்சாவூர், மின் நகரில் 5 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 110/11 கி.வோ. துணை மின் நிலையம்; கரூர் மாவட்டம் – எஸ்.வெள்ளாளப்பட்டியில் 4 கோடியே 72 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 33/11 கி.வோ. துணை மின் நிலையம்;

என மொத்தம் 65 கோடியே 87 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 7 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

6 தளம், குளிரூட்டு வசதி, குடிநீர், கழிப்பறை

மேலும், சென்னை மாவட்டம், அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 56 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கான புதிய தலைமை அலுவலக கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இப்புதிய தலைமை அலுவலகக் கட்டடமானது, தரைகீழ், தரை மற்றும் 6 தளங்களுடன், அலுவலக அறைகள், கூட்டரங்கங்கள், வாகன நிறுத்துமிடங்கள், மின்தூக்கிகள், மையப்படுத்தப்பட்ட குளிரூட்டு வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *