செய்திகள்

ரூ.14 கோடியில் காவல், தீயணைப்புத்துறை கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

Spread the love

சென்னை, பிப். 20–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் கடலூர் மாவட்டம், புவனகிரியில் 3 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், 10 கோடியே 76 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவலர் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 2 காவல்துறை இதர கட்டடங்கள், 1 வட்டார தடய அறிவியல் ஆய்வகக் கட்டடம், 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 12 குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

காவலர் குடியிருப்புகள்

அந்த வகையில், கடலூர் மாவட்டம், புவனகிரியில் 3 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இக்காவலர் குடியிருப்பு, 17 காவலர் மற்றும் தலைமைக் காவலர் குடியிருப்புகள், 3 உதவி ஆய்வாளர் குடியிருப்புகள் மற்றும் ஒரு ஆய்வாளர் குடியிருப்புகளை கொண்டது. மேலும், இக்குடியிருப்புகள், ஆழ்துளை கிணறு, நீர்தேக்க தொட்டிகள், கழிவுநீர் மற்றும் குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் 88 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவலர் குடியிருப்புகள்; செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கபட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (போக்குவரத்து காவல் நிலையம்) ஆகிய இடங்களில் 2 கோடியே 40 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள்;

குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம்

ஈரோடு மாவட்டம் ஈரோட்டில் 94 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் 54 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு;

சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தில் 3 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகக் கட்டடம்;

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் 1 கோடியே 9 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம்;

ஈரோடு மாவட்டம் – ஈரோட்டில் 1 கோடியே 87 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 12 குடியிருப்புகள்;

என மொத்தம், 14 கோடியே 13 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தடய அறிவியல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத், தலைமைச் செயலாளர் க. சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குனர் ஜெ.கே. திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) சி. சைலேந்திர பாபு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ம.நா.மஞ்சுநாதா, தடய அறிவியல் துறை இயக்குநர் (பொறுப்பு) எம். சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *