செய்திகள்

ரூ.38 கோடியில் மருத்துவ கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

Spread the love

சென்னை, ஜன. 31–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மையக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 19 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், நவீன மருத்துவக் கருவிகள் நிறுவுதல், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை தோற்றுவித்தல், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகளிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

200 படுக்கைகள்

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மையக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இப்புதிய மையக் கட்டடம் தரை மற்றும் ஆறு தளங்களை கொண்டது. மேலும், இப்புதிய மையத்தில் 200 படுக்கைகள், நவீன வசதிகளுடன் கூடிய மூன்று அறுவை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு பின்கவனிப்பு பிரிவு, பேறுகால முன்கவனிப்பு அறை, பேறுகால பின்கவனிப்பு அறை, மகப்பேறுகால வலிப்பு நோய் சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, ஸ்கேன் துறை, மகப்பேறு துறை, அவசர சிகிச்சை பிரிவு, சிறப்பு சிசு சிகிச்சை பிரிவு, செவிலியர்கள் அறை, கூட்ட அரங்கம் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

ஒரத்தநாடு

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கம் மற்றும் 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு; விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாய்தளத்துடன் கூடிய அறுவை அரங்கு மற்றும் தலைக்காய சிகிச்சை பிரிவு; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறுவை அரங்கு மற்றும் தலைக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் கிகிச்சை பிரிவுக்கு அறுவை அரங்க கட்டடம்;

செவிலியர் பள்ளியில்…

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள செவிலியர் பள்ளியில் 7 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விப் பிரிவுக் கட்டடம்;

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில், தருமபுரி மாவட்டம் – ஒகேனக்கல் மற்றும் வத்தல்மலை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்; சிவகங்கை மாவட்டம் – வெங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்; திருவண்ணாமலை மாவட்டம் – தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம்; தஞ்சாவூர் மாவட்டம் – கல்லுக்குளம், கரந்தல் மற்றும் மகர்நோம்புசாவடி ஆகிய மூன்று நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்; என மொத்தம், 37 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் கே. செந்தில் ராஜ், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஆர். நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் டி. எஸ். சுவாதி ரத்தினவதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *