போஸ்டர் செய்தி

ஸ்ரீபெரும்புதூர் கிளாய் கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்: எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

Spread the love

சென்னை, ஜன.13–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (13–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

மேலும், திருச்சி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் 9.7.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ், கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், மற்றும் வெளிக்கொணரவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ‘‘அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்.

3 ஆடுகளங்கள்

அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக ‘‘அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு” அமைக்கப்படும். மேலும், அனைத்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட் அல்லது பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் மற்றும் விளையாட்டு போட்டிகளை ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடத்துதல், போன்ற இனங்கள் செயல்படுத்தப்படும்.

இளைஞர்களிடையே தலைமைப் பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மையினை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டுத் திறன்மிக்க இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

விடுதி கட்டிடம்

மேலும், திருச்சி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நேபாள நாட்டின் காத்மாண்டு மற்றும் பொகாராவில் 1.12.2019 முதல் 10.12.2019 வரை நடைபெற்ற 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசிய கண்டத்தை சேர்ந்த 7 நாடுகள் கலந்து கொண்டன. இந்தியாவின் சார்பில் 487 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய அணி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 174 தங்கம், 93 வெள்ளி மற்றும் 45 வெண்கலம், என மொத்தம் 312 பதக்கங்களை வென்று முதலிடம் பெற்றது.

பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.36 கோடி ஊக்கதொகை

இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர். தடகள தனிநபர் போட்டிகளில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களும் மற்றும் குழுப்போட்டியில் 2 வெள்ளி பதக்கமும், கையுந்துபந்து குழுப்போட்டியில் 1 தங்கப் பதக்கமும், கைப்பந்து குழுப்போட்டியில் 1 தங்கப் பதக்கமும், மேசைப்பந்து தனிநபர் போட்டியில் 1 தங்கம் மற்றும் குழுப்போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளிப் பதக்கமும், பளுதூக்குதல் போட்டியில் 87 கிலோ உடல் எடை பிரிவில் 1 தங்கப் பதக்கமும், நீச்சல் போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்களும்,

ஸ்குவாஷ் தனிநபர் போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கமும், குழுப்போட்டியில் 2 வெள்ளிப் பதக்கமும், வாள்வீச்சு தனிபநர் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கமும் மற்றும் குழுப்போட்டியில் 3 தங்கமும், டென்னிஸ் தனிநபர் போட்டியில் 1 தங்கமும், கலப்பு இரட்டையர் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளிப் பதக்கமும் மற்றும் குழுப்போட்டியில் 1 தங்கமும், குத்துச் சண்டை போட்டியில் 48 கிலோ உடல் எடைப் பிரிவில் 1 தங்கப் பதக்கமும், கூடைப்பந்து குழு போட்டியில் 1 தங்கப் பதக்கமும், துப்பாக்கி சுடுதல் தனிநபர் போட்டியில் 2 தங்கமும், குழுப்போட்டியில் 2 தங்கப் பதக்கங்களும், கால்பந்து குழுபோட்டியில் 1 தங்கப் பதக்கமும் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 2 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி வாழ்த்தினார்.

முதல்வருக்கு நன்றி

முதலமைச்சரிடமிருந்து உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலர் மற்றும் உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகள் இயக்குனர் எஸ். பழனிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *