செய்திகள்

காஞ்சிபுரத்தில் ரூ.25 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி: எடப்பாடி திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்,பிப்.27-–

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.24 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்திற்கு பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் விடுதிகள், வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியின் மூலம் காஞ்சிபுரம் ஒலிமுகமதுப்பேட்டை அருகே ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 24 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் 5 தளங்களுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிமுடிக்கப்பட்டது.

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதையொட்டி காஞ்சிபுரத்தில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர். மணிவண்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மார்க்கெட் வாலாஜாபாத் வி.அரிக்குமார், கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், ஆ.குமரன், முன்னாள் மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *