செய்திகள்

மருத்துவ படிப்பு ‘சீட்’: ஆணைகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி

மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று துவங்கியது

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டில்

மருத்துவ படிப்பு ‘சீட்’:

ஆணைகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் உள்ள கல்லூரிகளில் இடம்

ஏழைகளின் கனவு நனவானது

சென்னை, நவ.18–

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின் படி இன்று மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் வழங்கினார்.

மருத்துவ கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களை முதலமைச்சர் பாராட்டி மருத்துவ படிப்புக்கான உபகரணங்களை வழங்கினார்.

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவர்களுக்கு மட்டும் தான் மருத்துவ படிப்பு படிக்க ‘சீட்’ கிடைத்தது. இன்று எம்.பி.பி.எஸ். படிக்க 313 சீட்களும், பல் மருத்துவ கல்லூரியில் சேர 92 இடங்களும் என மொத்தம் 405 ‘சீட்’கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கிறது என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. ஒரு நாளைக்கு 500 பேர் கலந்தாய்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் நாள் என்பதால் 300 பேர் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை முதலமைச்சர் கொண்டு வந்து இந்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்படுகிறது. கடந்த 16–ந் தேதி அன்று தர வரிசை பட்டியலை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

இன்று பெரியமேடு நேரு ஸ்டேடியத்தில் கலந்தாய்வு துவங்கியது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்றைய கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

இன்றைய கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பிரசித்தி பெற்ற அரசு மருத்துவ கல்லூரிகளான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்திருந்தனர்.

10 மாணவர்களுக்கு ஆணை வழங்கினார்

இதில் 10 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேர்க்கை ஆணைகளை வழங்கி ஏழை எளிய மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார். அந்த மாணவ மாணவிகள் ஆனந்த கண்ணீருடன் முதலமைச்சருக்கு தங்களது நன்றியை தெரிவித்தார்கள்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எடப்பாடி பேச்சு

அவர் பேசியதாவது:–

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த நாள் எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமான நாள். தமிழக வரலாற்றில் இந்த நாள் பொன்னாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு நன்னாள். நான் அரசு பள்ளியில் படித்தவன். எனக்கு மிக மனநிறைவு ஏற்படுத்தும் நாள் இது. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து மகிழ்ச்சி தரும் திருநாள். அம்மாவும் நானும் நீட் தேர்வு கூடாது என பலமுறை பிரதமரை சந்தித்த போதும் கடிதம் மூலமும் வலியுறுத்தி வந்தோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டோம். சட்ட போராட்டம் நடத்தினோம். ஆனால் உச்சநீதிமன்ற ஆணைப்படி இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வு வந்தபின் 3 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது குறைந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திறமையானவர்களாக இருந்த போதிலும் நீட் தேர்வை எதிர்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு மிக குறைவாக இருந்தது. அவர்களால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.

+2 படித்த மாணவர்கள் 8 லட்சத்து 41 ஆயிரத்து 259 பேர். இதில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 பேர் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள். அதாவது 41 சதவிகிதம் பேர். கடந்த ஆண்டு 6 அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தான் மருத்துவ கல்லூரிகளில் சேரும் நிலை இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று நான் உறுதி கொண்டேன். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். ஏழை எளிய மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்க அவர்களது மருத்துவ கனவு நனவாக இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தேன்.

உங்களது குடும்பம் எப்படி அடையாளப்படுத்தப்பட்டது என்பது தெரியும். இனி உங்களது குடும்பத்தை மருத்துவ குடும்பம் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளும், 15 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. அம்மா இருந்த போது 1945 மருத்துவ சீட் தான் இருந்தது. 2017–ல் இது 3 ஆயிரத்து 6 ஆக உயர்ந்தது, இன்று 3 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது.

11 புதிய மருத்துவ கல்லூரிகள்

அம்மாவின் ஆட்சியில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்கி இருக்கிறோம். இதன் மூலம் 1550 புதிய மருத்துவ சீட்கள் உருவாக்கப்படும். 2021–22 ஆண்டிலிருந்து புதிதாக 1550 சீட்கள் உருவாக்கப்படும். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 1990 மருத்துவ சீட்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேருக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க இருக்கிறது. அதேபோன்று பி.டி.எஸ். படிப்பில் 92 இடங்கள் கிடைக்கும். மொத்தத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடை கொண்டு வந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது. நமது முதலமைச்சர் வரம் தரும் சாமியாக இருக்கிறார். வாழ்வு தரும் முதலமைச்சராக, அருள் பாலிக்கும் முதலமைச்சராக திகழ்கிறார் என்று கூறினார்.

கலந்தாய்வு துவங்கியது

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது. நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறுவதை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முகக் கவசம், தனி நபர் இடைவெளி, நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே கலந்தாய்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், அவர்களுடன் வருவோரும் அமருவதற்கான இருக்கைகள் போதிய இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாது, அவ்வப்போது அதனை கிருமி நாசினி கொண்டு பணியாளர்கள் தூய்மைப்படுத்தினார்கள். ஒவ்வொரு டேபிள்களின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

சிறப்பு பஸ்கள்

வெளியூர்களில் இருந்து வரும் மாணவ-–மாணவிகள் கலந்தாய்வு நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்தும் இயக்கப்பட்டன.

நாளை (வியாழக்கிழமை) 268 முதல் 633 தரவரிசையில் (நீட் தேர்வில் 189 முதல் 133 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 634 முதல் 951 தரவரிசையில் (நீட் தேர்வில் 132 முதல் 113 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்க இருக்கிறது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்களும், 165 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இதைத் தவிர 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.

நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23,707 பேரின் விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,276 பேரின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 951 பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *