செய்திகள்

கூட்டுறவுத்துறையில் 293 உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை,ஜன.9–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலமாக 293 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 9 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில அளவிலான தலைமை கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக பணியாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில், மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலமாக தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாகவுள்ள 175 உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் காலியாகவுள்ள 57 உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தில் காலியாகவுள்ள 53 உதவியாளர் பணியிடங்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் காலியாகவுள்ள 6 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தில் காலியாகவுள்ள 2 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், என மொத்தம் 293 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் 9 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், துணைத் தலைவர் எஸ்.ஆசைமணி, மேலாண்மை இயக்குனர் ஆர்.ஜி. சக்திசரவணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *