செய்திகள்

இளைஞர்களுக்கு கடல்சார் பயிற்சி, கப்பல் நிறுவனங்களில் வேலைக்கு சேர ஆணை: எடப்பாடி வழங்கினார்

குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கி பயின்ற

இளைஞர்களுக்கு கடல்சார் பயிற்சி, கப்பல் நிறுவனங்களில் வேலைக்கு சேர ஆணை:

எடப்பாடி வழங்கினார்

சென்னை, டிச.21–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (21–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கி பயின்ற 7 இளைஞர்களுக்கு கடல்சார் அறக்கட்டளை மற்றும் இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவனம் ஆகிய பயிற்சி நிறுவனங்களில் 6 மாத காலம் கடல்சார் பயிற்சியில் சேர்வதற்கான சேர்க்கை ஆணைகளையும், அவர்கள் பயிற்சி முடித்த பிறகு தனியார் கப்பல் நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான பணி உறுதி ஆணைகளையும் வழங்கினார்.

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்து வீடு திரும்பிய மற்றும் பிற்காப்பு நிறுவனங்களில் தங்கியுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் கல்வி, உடற்கூறு, சமூக, பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஆர்.ராஜசேகர், கே.கார்த்திக், ஆர்.சக்திவேல், எஸ்.சரத், எஸ்.வின்சென்ட் வில்லியராஜ், ஏ.கார்த்திக், எம். கிருஷ்ணன் ஆகிய 7 இளைஞர்களுக்கு கடல்சார் அறக்கட்டளை மற்றும் இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவனம் ஆகிய பயிற்சி நிறுவனங்களில் 6 மாத கால கடல்சார் பயிற்சி பெறுவதற்கான சேர்க்கை ஆணைகளை முதலமைச்சர் இன்று வழங்கினார்.

இம்மாணவர்களுக்கான பயிற்சி கட்டணத்தில் இந்நிறுவனங்கள் அளித்துள்ள கட்டணச் சலுகை போக, மீதமுள்ள பயிற்சி கட்டணமான 7 லட்சம் ரூபாய் ‘தமிழ்நாடு இளைஞர் நிதி’ நிதியிலிருந்து வழங்கப்படும்.

இந்த 6 மாத கால கப்பல் பயிற்சியை முடித்த பிறகு இவ்விளைஞர்களுக்கு பணி வழங்கும் வகையில், அபீஜய் ஷிப்பிங் லிமிடெட், செவன் ஐலேண்ட் ஷிப்பிங் லிமிடெட், ஓமிக்ரான் மரைன் பிரைவேட் லிமிடெட், டிரான்ஸ்வேர்ல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், ஏ.பி.எஸ். மரைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஆகிய 5 தனியார் கப்பல் நிறுவனங்கள் அளித்துள்ள பணி உறுதி ஆணைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

இதன்மூலம், ஆதரவற்ற இளைஞர்கள் வணிக கப்பல்களில் பணிபுரிவதற்கு தேவையான பயிற்சியும், வேலைவாய்ப்பும் பெற்று வாழ்வில் மேன்மையுற வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் க. சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் எஸ். மதுமதி, சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர். லால்வேனா, கடல்சார் அறக்கட்டளை மற்றும் இந்துஸ்தான் கடல்சார் பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகள், தனியார் கப்பல் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *