செய்திகள்

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ. 75 லட்சம்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை, பிப். 4–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (4.2.2021) தலைமைச் செயலகத்தில், 18–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள 18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ. தங்கராஜிடம் வழங்கினார்.

புரட்சித் தலைவி அம்மா திரைப்பட உலகிற்குப் பெருமை சேர்த்திடும் வகையில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திட 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற 9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, 2018-ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார்கள். 2019-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சர் வழங்கினார்.

அந்த வகையில், தற்போது சென்னையில் 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ள 18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சர் இன்று, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ. தங்கராஜிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *