கொரோனா தொற்று தடுப்பு பற்றி
கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
சென்னை, நவ.27-
தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பற்றி கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு கலெக்டர், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வது வழக்கம். தற்போது தமிழகத்தில் 30–-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த ஊரடங்கை எவ்வாறு தொடரலாம்? கொரோனா மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? கொரோனா 2-–வது அலை வீச எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? என்பது போன்ற அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.