செய்திகள்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

Spread the love

காஞ்சீபுரம், நவ 7–

காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை–தென்கலையினர் இடையே மோதல் ஏற்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள பூதத்தாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளினார்.

பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவர் நடைபெற்றபோது உற்சவ மூர்த்திகள் முன்பு தென்கலையினர் பிரபந்தங்களை பாட முயற்சித்தனர். அப்போது வடகலையினர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பிரபந்தங்களை பாடக் கூடாது என வாய்த்தகராறில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே கைகலப்பு, மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இது பற்றி தகவல் அறிந்ததும் சின்னகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் மற்றும் போலீசார், வருவாய் துறையினர், கோவில் செயல் அலுவலர் என். தியாகராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அரைமணி நேரத்திற்கு மேலாக கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இரு தரப்பினரும் பிரபந்தங்களை பாட வேண்டாம் என காவல்துறை, இந்து அறநிலைத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு பிரபந்தங்களை ஆவேசமாக பாடி சுவாமியை வழிபட்டனர்.வரதராஜ பெருமாள் கோவிலில் வடக்கலை,தென்கலைக்கிடையே ஒவ்வொரு உற்சவத்தின் போதும் தொடர்ந்து தகராறு ஏற்படுவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *