செய்திகள்

கொரோனா வைரஸ்: வாழ்க்கையை புரட்டிப்போடும் நீண்டகால பாதிப்புகள்

நியூயார்க், அக். 17-

கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்புகள் ஒருவரை நான்கு வேறுபட்ட வகைகளில் பாதிக்கக் கூடும் என்று மதிப்பாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட பிறகு தனக்கு நீண்டகால வைரஸ் பாதிப்புகள் இருப்பதை நம்ப முடியாதவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும், அதற்கேற்ற சிகிச்சையை சுகாதார பணியாளர்கள் வழங்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.

மேலும், கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளுடன் வாழ்பவர்கள் மிகப் பெரிய உளவியல் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வாரங்களிலும் அதைவிட கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களிலும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைவதாக அறியப்படுகிறது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் நீண்டகால நோய்த்தொற்று பாதிப்புகளுடன் வாழ்ந்து வரலாம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், இந்தியா, பிரேஸில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீண்டகால பாதிப்புகளை கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளை கொண்டவர்களுக்கு உதவும் ஆராய்ச்சி முடிவை, பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது கொரோனாவின் நீண்டகால பாதிப்புகளால் சுவாசம், மூளை, இதயம், சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் தோல் உள்ளிட்டவற்றில் நாள்பட்ட நோய்த்தொற்று அறிகுறிகள் தொடருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிகுறிகளுக்கு கீழ்க்காணும் நான்கு வெவ்வேறு நோய்க்குறிகள் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். நுரையீரல் மற்றும் இதயத்தில் நிரந்தர உறுப்பு சேதம், பிந்தைய தீவிர சிகிச்சை நோய்க்குறி, பிந்தைய வைரஸ் சோர்வு நோய்க்குறி, தொடர் கோவிட்-19 அறிகுறிகள் ஆகியவை.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கடுமையான கோவிட்-19 பாதிப்புகளுடன் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியுள்ளனர். ஆனால், லேசான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அளவிலானோருக்கு ஒருபோதும் பரிசோதனை செய்யப்படவில்லை அல்லது கண்டறியப்படவில்லை.

“சிலருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு என்பது நீண்டகால பிரச்சனை என்பது இதன் மூலம் தெளிவாகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *