செய்திகள் முழு தகவல்

சின்னப்பம்பட்டி தெருக் கிரிக்கெட்டில் தொடங்கி சிட்னி மைதானத்தில் நுழைந்த யார்க்கர் நடராஜன்!

“எந்த விதைக்குள் எத்தனை வீரியமான மரம் இருக்கிறது என்பது தெரியாது” என்பது நாட்டுப்புற மொழி. ஆம், அப்படித்தான், ஒரு சிற்றூரின் தெருவில் கிரிக்கெட் விளையாடும் ஒரு சிறுவன் ஆஸ்திரேலியா நாட்டு மண்ணில் கால்பதிப்பான் என்றும் கூட யாரும் கணித்திருக்க மாட்டார்கள். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணை மிதித்ததோடு மட்டுமல்லாமல், சிட்னி கிரிக்கெட் விளையாட்டு திடலில் விளையாடினால், அதுதான் மேல் சொன்ன பழமொழியின் முழு பொருள். இந்த சிற்றூர் நடராஜன் என்ற விதைக்குள் மிகப்பெரிய யார்க்கர் நடராஜன் என்ற மரம் அடங்கி இருந்துள்ளது என்பது, உலகிற்கு இப்போதுதான் தெரிய வருகிறது.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் பிறந்த இவர், அரசுப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, எத்தனையோ நாட்கள் பென்சில், நோட்டு புத்தகங்கள் கூட வாங்க பணமில்லாமல் தவித்துள்ளார். சிறுவயதிலிருந்தே எல்லாரையும் போல, கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். தெரு கிரிக்கெட்டில் தான் தொடங்கியது இந்த சர்வதேச போட்டிக்கான தொடக்கப்புள்ளி. டென்னிஸ் பாலில் தான் பவுலிங்கை தொடங்கினார். நாடராஜனுக்கு திருமணம் ஆன பின்னும் கிரிக்கெட் தான் அவருடைய முழுநேர பணியாக இருந்தது.

நாட்கள் செல்ல செல்ல, கிரிகெட்டில் சிறப்பாக பந்து வீசியதால், டிவிஷன் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் நடராஜன். சென்னையில் நடைபெறும் டிவிஷன் போட்டிகளுக்குச் செல்ல கூட அப்போது நடராஜன் கையில் காசு இருக்காது. அண்ணன் உதவியுடன் டிவிஷன் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார். ஜெர்சி வாங்கவோ, ஷூ வாங்கவோ காசில்லை. ஆனால் மனதில் கனவு மட்டும் இருந்தது. ஸ்பான்சர்ஸ் கிடைக்க ஆரம்பித்தனர். அவர்களால் ஜெர்சி, ஷூ, பேட், உள்ளிட்டவற்றை வாங்கி போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்

ஊக்குவிப்பவன் சரியாக ஊக்குவித்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்று சொல்வதுண்டு. அத்ற்கேற்ப ஜே.பி.. என்னும் ஜெயப்ப்பிரகாஷ் என்பவரின் ஊக்குவிப்பு, நடராஜனின் பந்து வீசும் திறனை அங்கீகரித்து ஊக்குவித்தது. விளைவாக சென்னையில் கிளப்புகளில் கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறார். அண்டர் 19, அண்டர் 16 போட்டிகளில் ஆடமாலேயே 2014ம் ஆண்டு ரஞ்சி டிராபி போட்டிக்கு தேர்வானார் நடராஜன். குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் நடராஜனின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஆம்! ரஞ்சி டிராபியின் முதல் போட்டியில் பவுலிங் தவறாக இருக்கிறது என்று கூறி நடராஜன் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அந்த ஒரு ஆண்டு வாழ்க்கையின் அத்தனை சவால்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது நடராஜனுக்கு. மன உளைச்சல், கனவுகள் கலைந்துவிடுமோ என்ற எண்ணம் இப்படியாக ஒரு ஆண்டு கடுமையாக பயிற்சி எடுத்து, தன்னுடைய பவுலிங் ஆக்சனை மாற்ற போராடினார் . ’ஒருமுறை தான் தவறும்’ என்ற வசனத்தின்படி, மீண்டும் கம்பேக் கொடுத்தார். வெறித்தனமான கம்பேக். புதிய உற்சாகத்துடன் 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். டிஎன்பில்-லில் களமிறங்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

3 கோடிக்கு ஏலம்

டிஎன்பிஎல் மேட்ச்சில், நடராஜன் போட்ட சூப்பர் ஓவர்தான், அன்றைய பஞ்சாப் அணி அவரை ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மூன்று கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்க காரணமாக இருந்தது. ஆனாலும், அந்த ஆட்டங்களில் அவர் சிறப்பாக சோபிக்கவில்லை. அதனால், அந்த அணி இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் எடுக்கவில்லை. மாறாக, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, அவரை இந்த ஆண்டு ஐபிஎல் ல் ஏலத்தில் எடுத்து ஆதரவு கொடுத்திருந்தது.

அதேபோல, இந்த ஆண்டு அவர் ஐபிஎல் ஆடிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்துள்ளது. நடராஜன் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையான ஆண்டு 2020 என்றுதான் சொல்ல வேண்டும். பெரிதாக சோபிக்காமல், இருந்த நிலையில், இந்த முறை சன்ரைசர்ஸ் அணியில் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் மனதைப் பறித்துவிட்டார்.

சின்னப்பம்பட்டியில் தொடங்கி சிட்னி

கிரிக்கெட்டுக்கு தேர்வாக திறமையை விடவும் இந்தியாவில் வேறு வேறு அம்சங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது என்பது, பள்ளிக் குழந்தைக்கும் தெரியும். அதிலும் அன்றாடம் காய்ச்சிகள் என்று சொல்லத்தக்க நிலையில், ஏழை கிராமத்து பையனுக்கு எத்தனை தடைகள் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதை எல்லாம் கடந்து, இந்த ஐபிஎல் போட்டியில் நடராஜன் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி கட்டத்தில் (டெத் பவுலிங்) சிறப்பாக பந்து வீசக்கூடிய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். தனது யார்க்கர் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் அவரது பந்தில் திணறியதை நாம் பார்த்தோம்.

அதிக கவனம் ஈர்த்த பௌலராக இருந்த நடராஜன், இந்திய அணியின் கண்களில் தப்பித் தவறி விழுந்துள்ளார். அரசியல் காரணங்கள் எல்லாம் கடந்து, முழுக்க முழுக்கத் தன் திறமையின் துணை கொண்டு வென்று தற்போது இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கிறார். ஆம். ஐபிஎல் முடிந்தபிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சுற்றுப்பயண ஆட்டத்தில் விளையாட நடராஜனும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2 போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. அந்த நிலையில், 3 வது போட்டியில் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார் நடராஜன். ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரர்களின் 2 விக்கெட்டுகளை யார்க்கர் பந்து வீச்சில் எடுத்து உலகையே தன்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தார்.

இதுவரை சுமார் 900 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் இந்திய கிரிக்கெட்டின் இத்தனை ஆண்டு வரலாற்றில் மொத்தமாகவே 10 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் இந்திய அணிக்காக ஆடியுள்ளனர். நடராஜன் தான் 11 வது வீரர். 2011 உலகக்கோப்பை அணியில் எதிரணியை மிரட்டும் வகையில் இந்தியாவின் கையிலிருந்த ஒரே இடக்கை பௌலர் ஜாஹிர் கான் தான். 2011 உலகக்கோப்பையில் 21 விக்கெட்டுகளை அடுத்து இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்த இடத்திலிருந்துதான் அணிக்குள் நடராஜனின் தேவையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த தேவையை நடராஜன் தனது யார்க்கர்கள் மூலம் நிறைவேற்றுவார் என்பதே இந்திய அணியின் எதிர்பார்ப்பு.

கிரிக்கெட் சோறு போடுமா?

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிருபர் பகவதி பிரசாத் எழுதிய “கிரிக்கெட் சோறு போடுமா?”நூலில் கிரிக்கெட்டால் சாதித்தவர்களின் பட்டியல் எழுதப்பட்டிருக்கும். அந்த நூலில், யாக்கர் நடராஜனின் வாழ்க்கையும் எழுதப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும், சாலை ஓரத்தில் பத்துக்கு பத்து சிமெண்ட் அட்டை வீடு, வீட்டுக்கு முன்பு சின்ன கடை என வறிய நிலையின் அத்தனை அடையாளங்களும் நிறைந்துள்ளன பந்து வீச்சாளர் நடராஜனின் வீடு என்கிறார்கள். தன் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி விளையாடி வரும் வேளையிலும், அப்பா கூலி நெசவாளியாகவும், அம்மா கறிக் கடையில் சில்லி போட்டு விற்பனை செய்பவராகவும் எந்த அடையாளமும் மாறாமல் அப்படியே உள்ளனர். அவரது தாய் சாந்தா புகழ்பெற்ற பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில்,

“எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த பையன்தான் நடராஜன். நடராஜனின் இளமைக்காலம் மிகவும் கஷ்டமான காலமாகவே இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் தறி ஓட்டிதான் பிழைப்பை ஓட்டினோம். பின்பு வீட்டுக்கு ஒட்டியதுபோலவே இந்த தள்ளுவண்டி சில்லிச் சிக்கன் கடையை ஆரம்பித்தேன். ரேசன் அரிசி சாப்பாடும், ரேசன் எண்ணெய்யும் எங்களது குடும்பத்து உணவு ஆதாரங்களாக இருந்துள்ளன. எங்களது குடும்பப்பொருளாதாரத்தை கொண்டு நடராஜனை பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படிக்க வைக்க முடிந்தது. அதன் பின்பு, அவனுடைய நண்பர் ஜெயப்பிரகாஷ் தான் எல்லா வகையிலும் வழிகாட்டினார். நடராஜன் கல்லூரியில் சேர்ந்தபோது பஸ்சுக்கு ஐந்து ரூபாய் காசு கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறோம்” என்று கண்ணீர் மல்க சாந்தா நினைவு கூர்ந்துள்ளார்.

நடராஜனின் விளையாட்டு ஆர்வத்தை நினைவுகூர்ந்த அவர், ”ஒருமுறை நடராஜனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனாலும், கிரிக்கெட் விளையாடுவதை விட்டதில்லை. தினமும் கிரிக்கெட் விளையாடச் சென்றால் மாலையில் ஏழு எட்டு மணிக்கு வீட்டுக்கு வருவான். நாங்கள் கஷ்டப்பட்டபோது கூட அவனை வேலைக்கு போ என்று சொல்லாமல் விளையாட அனுமதித்தது இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடராஜன் இடது கையால் பந்து வீசுவதால் லெஃப்ட் என்றும், போல்ட் என்றும் பிள்ளைகள் கூப்பிடுவார்கள். நாங்கள் செல்லமாக “மணி” என்று அழைப்போம் என்று நினைவு கூர்ந்துள்ளார் தாய் சாந்தா.

சாதனையாளர்களுக்கு தடைகள் எப்போதும் படிகள் தானே.. வாழ்த்துகள் நடராஜன்.

மா. இளஞ்செழியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *