செய்திகள்

துபாயிலிருந்து டைரி மில்க் சாக்லெட் மூலம் ரூ. 28.7 லட்சம் தங்கம் கடத்திய பெண்

சென்னை, ஜன. 8-

துபாயிலிருந்து சென்னை வந்த பெண் டைரி மில்க் சாக்லெட் மூலம் கடத்திய ரூ. 28.7 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து நேற்று சென்னைக்கு, எமிரேட்ஸ் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்து வந்த சென்னையைச் சேர்ந்த பத்மா பாலாஜி (வயது 25) என்பவரிடம் விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது உள்ளாடையில் கேட்பரீஸ் டைரி மில்க் சாக்லெட் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைப் பிரித்துப் பார்க்கையில் அதில் தங்கப் பசை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ. 28.7 லட்சம் மதிப்பில் 546 கிராம் எடையிலான தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கடந்த ஜனவரி 6ஆம் தேதி துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா IX 1644 என்ற விமானத்தில் பயணம் செய்த 11 பேரை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அவர்களைச் சோதனை செய்ததில் 12 தங்கப் பசை அடங்கிய பொட்டலங்கள், அதாவது ரூ. 1.14 கோடி மதிப்பில் 2.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோன்று சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஜி9-471 என்ற விமானத்தில் சென்னை வந்த மூன்று பேரிடமிருந்து ரூ. 36.40 லட்சம் மதிப்பில் 685 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று கடந்த சில தினங்களாக மொத்தமாக ரூ. 1.97 கோடி மதிப்பிலான 3.72 கிலோ தங்கத்தைச் சுங்கச் சட்டத்தின் கீழ் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகச் விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *