செய்திகள்

குற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்

சென்னை, பிப். 27–

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த விருகம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, சாலிகிராமம், வேலாயுதம் காலனி, மல்லிகை அப்பார்ட்மெண்ட், எண்.3 என்ற முகவரியில் சினிமா புகைப்பட கலைஞர் நியூட்டன் (வயது 44), த/பெ.கஸ்பர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 19–ந் தேதி காலை தனது நண்பர் ஆடிட்டர் ரகுஜி என்பவரை பார்க்க செல்வதாக மனைவி கௌசல்யாவிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர் மறுநாள் 20–ந் தேதி இரவு வரை வீடு திரும்பாததால் அவரது மனைவி கௌசல்யா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்தார்.

கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் தி.நகர் துணை ஆணையாளர் மேற்பார்வையில் அசோக்நகர் சரக உதவி ஆணையாளர் பிராங்க் டி ரூபன் தலைமையில் விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெ.நந்தினி, ராயலா நகர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.சுப்பிரமணி, உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை குழு அமைக்கப்பட்டது .

தனிப்படை காவல் குழுவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தும், தி.நகர் சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினர் உதவியுடன் மேற்படி கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருவேற்காடு திலீப் (வயது 28), வியாசர்பாடி சதீஷ்குமார் (39), த/பெ.விஜயரங்கம், திருத்தணி சுனில்குமார் (31), அரக்கோணம் கௌதம் (25), விக்கி (எ) விக்னேஷ் (22), கொளத்தூர் சீனிவாசன் (33) ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். கடத்தப்பட்ட நியூட்டன் மற்றும் ரகுஜி ஆகிய இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடமிருந்து 1 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல், பூந்தமல்லி சரக உதவி ஆணையாளர் கே.என்.சுதர்சன் மேற்பார்வையில், பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் என்.எஸ்.குமார், திருவேற்காடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆர்.அலெக்ஸ் தலைமையில், தலைமைக் காவலர் ரத்தினவேலு, முதல்நிலைகக் காவலர் சிவகணேசகுமார் மற்றும் காவலர் யூனிஸ்கான் ஆகியோர் புளியம்பேடு, சிறு குறுக்கு தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது, மேற்படி 2 வாகனங்களில் வந்த 8 நபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். காவல் குழுவினர் சந்தேகத்தின் பேரில், மேற்படி கார் மற்றும் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஜெயசூர்யா (24), சஞ்சய் (20), ஸ்ரீநாத் (21), ரஞ்சித்குமார் (19), பிரசாந்த் (19), சரத்குமார் (27), அருண் (20), சேரன் (22) ஆகிய 8 பேரை கைது செய்து 18 கிலோ எடை கொண்ட கஞ்சா, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மேற்படி 1 கார் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *