செய்திகள்

உலகின் சிறந்த 100 என்ஜினியரிங் கல்லூரிகள்: 94வது இடத்தில் சென்னை ஐஐடி

சென்னை, மார்ச். 5–

உலகின் தலைசிறந்த 100 என்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனமும் இடம்பிடித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள க்யூஎஸ் (QS) உலக பல்கலைக்கழகம் 2021-ம் ஆண்டின் சர்வதேச அளவிலான சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஐஐடி சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவில் உலகளவில் ஐஐடி பாம்பே 49-வது இடத்தையும், டெல்லி 54-வது இடத்தையும், சென்னை 94-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதைத் தொடர்ந்து ஐஐடி காரக்பூர் 101-வது இடத்தையும் ஐஐஎஸ்சி பெங்களூரு 103-வது இடத்தையும் பெற்றுள்ள நிலையில், ஐஐடி கான்பூர் மற்றும் ரூர்க்கி முறையே 107 மற்றும் 170-வது இடங்களைப் பிடித்துள்ளன.

உலக அளவில் மாஸாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

மொத்தம் 12 இந்தியக் கல்வி நிறுவனங்கள் இந்த முதல் 100 இடத்தில் வந்துள்ளன. இத்தகவலைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இந்த நிறுவனங்களின் நிர்வாகத்துக்கு மனம் திறந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் உயர் கல்வியில் மத்திய அரசு அதிக கவனமும், உயர் முன்னுரிமையும் அளித்து வருவதால், கல்வியில் சீர்த்திருத்தங்களும் கொண்டு வருவதால் உலகளவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய 12 நிறுவனங்கள் இடம் பெற்றிருப்பது பெருமிதத்துக்குரியது என்றார் அவர்.

விஐடியும் சாதனை

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் துறையில் வேலூரில் உள்ள விஐடி 251லிருந்து 300 வரையிலான பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *