செய்திகள்

சென்னையில் ரூ.3 கோடி செலவில் 4 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகள்: மாநகராட்சி நடவடிக்கை

Spread the love

சென்னை, டிச. 4

சென்னையில் பழுதடைந்த குப்பைத் தொட்டிகளை மாற்ற ரூ.3 கோடியே 10 லட்சம் செலவில் 4,200 குப்பைத் தொட்டிகளை வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் தினமும் 5,400 டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இவை 19,158 தொழிலாளர்கள் மூலமாக வீடுவீடாகச் சென்று சேகரிக்கப்படுகின்றன. இவை, 5,482 மூன்று சக்கர சைக்கிள்களில் சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள 14,500 குப்பைத் தொட்டிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இவை காம்பாக்டர் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

இக்குப்பைத் தொட்டிகளில் சக்கரங்கள் உடைந்தும், தொட்டி களில் தகடுகள் துருப்பிடித்தும் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு பதிலாக ரூ.3 கோடியில் புதிய குப்பைத் தொட்டிகளை வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இந்த குப்பைத் தொட்டிகள், காம்பாக்டர் லாரியில் உள்ள ஹைட் ராலிக் வசதி மூலமாக எளிதில் தூக்கப்பட்டு, அதிலுள்ள குப்பைகளை லாரிக்குள் கொட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் நல்ல நிலையில் இல்லாவிட்டால், இவற்றை ஹைட்ராலிக் வசதி மூலம் தூக்குவதில் சிரமம் ஏற்படும். இதனால் சேதமடைந்த குப்பைத் தொட்டிகளை மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் தலா 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு உலோகத்தால் ஆன 1,000 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன. மேலும் தெருக்களில் ஆங்காங்கே தேங்கும் குப்பைகள் காற்றில் பறப்பதைத் தடுக்கும் விதமாக சக்கரங்கள் இடம்பெற்ற 3,200 குப்பைத் தொட்டிகள், ரூ.80 லட்சம் செலவில் வாங்கப்பட உள்ளன. மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சம் செலவில் 4,200 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *